கடற்படை துணைத் தளபதி கென்யா பயணம்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக கடற்படை துணைத் தளபதி (டி.சி.என்.எஸ்) வைஸ் அட்மிரல் சஞ்சய் மஹிந்த்ரு கென்யாவுக்கு சென்றுள்ளார். நேற்று (21.06.2023) கென்யாவில் நடைபெற்ற 9-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்றார்.  

கென்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரவை செயலாளர் திரு ஏடன் பேர் டூவல் கடற்படை துணைத் தளபதி திரு சஞ்சய் மஹிந்த்ரு சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு குறித்தும், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கென்ய பாதுகாப்புப் படைகளின் (கே.டி.எஃப்) தலைமைத் தளபதி ஜெனரல் பிரான்சிஸ் ஓ ஓகோலாவையும் அவர் சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் இருநாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டன.

தமது கென்ய பயணத்தின் போது, மொம்பாசாவில் உள்ள மடோங்வே கடற்படைத் தளத்திற்குச் செல்லும் திரு மஹிந்த்ரு, கென்ய கடற்படைத் தலைமையகத்தில் (கே.என்.எச்.க்யூ) அந்நாட்டு கடற்படைத் தளபதியுடன் கலந்துரையாடவுள்ளார். இரு கடற்படைகளுக்கும் இடையில் நடைபெற்று  வரும் கடல்சார் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் பார்வையிடுவதுடன், ஐஎன்எஸ் சுனைனா கப்பலில் பணியில் உள்ளவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.   

கடற்படை துணைத் தளபதியின் கென்யா பயணம், இருதரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

திவாஹர்

Leave a Reply