மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் புதுதில்லியில் இன்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று ஆலோசனை நடத்தினார். 2047-ம் ஆண்டு அடிப்படையிலான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, பேரழிவைத் தாங்கக்கூடிய வல்லமை கொண்ட நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் நாட்டில் பேரழிவு அபாயக் குறைப்பு முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் அது குறித்து விவாதிக்கும் நோக்கிலும் இன்றைய (13-06-2023) கூட்டம் நடைபெற்றது.

நாட்டில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக ரூ.8,000 கோடி மதிப்பிலான மூன்று முக்கியத் திட்டங்களை இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அறிவித்தார்:

1. மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டம்

2) மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஏழு அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க ரூ.2,500 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்படும்

3. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவு ஆபத்தைத் தணிப்பதற்காக தேசிய நிலச்சரிவு அபாய தணிப்புத் திட்டம் ரூ. 825 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்

ஆகிய முக்கிய அறிவிப்புகளை உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.

பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கை எனவும் இந்த இலக்கை அடைவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பேரிடர் மேலாண்மையில் பல மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஆனால் நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று கூறினார். பேரழிவுகளின் தன்மை மாறிவிட்டதாகவும் தற்போது அவற்றின்  தீவிரம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இவற்றைச் சமாளிக்க தயார்நிலையை நாம் மேலும் அதிகரித்து விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

கொவிட் -19 தொற்றுபாதிப்பு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டதையும், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 9 ஆண்டுகளில், பேரிடர் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள், தயார்நிலை அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் புதிய அணுகுமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளக் கூடிய 350 மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் இளைஞர் தன்னார்வலர்களை தயார்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

2005-06 முதல் 2013-14 வரையிலான 9 ஆண்டுகளையும், 2014-15 முதல் 2022-23 வரையிலான 9 ஆண்டுகளையும் ஒப்பிடுகையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். முந்தைய 9 ஆண்டுகளில் ரூ.35,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும்  தற்போது அது ரூ.1,04,704 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரூ.354 கோடி செலவில் குறுஞ்செய்தி மூலம் பொது எச்சரிக்கை வழங்கும் நடைமுறையை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பேரிடர் மேலாண்மைத் துறையில் பங்களித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மைக்காக வடகிழக்கு மாநிலங்களில் 271 சதுப்பு நிலங்கள் இஸ்ரோவால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். முந்தைய காலங்களில், இந்திய வானிலை ஆய்வு மையம் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மழை மற்றும் வெள்ளம் குறித்து மூன்று நாட்கள் முன்கூட்டியே முன்னறிவிப்பு அளித்து வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், இப்போது 5 நாட்களுக்கு முன்பே அந்த முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இது தயார் நிலைக்கு  கூடுதல் கால அவகாசத்தை வழங்குகிறது என்று கூறிய அவர், அடுத்த ஆண்டுக்குள் 7 நாட்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கைத் தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வெள்ளம் ஏற்படக்கூடிய 13 முக்கிய நதிகளின் கரைகளில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருநிலை மாற்ற அமைச்சகம் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply