டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இன்று நடைபெற்ற அதிகாரிகள் பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத் தளபதி  ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார்.   வழக்கமான  152 பயிற்சி வகுப்புகளிலிருந்தும், 135 தொழில்நுட்பப் பட்டதாரி பயிற்சி வகுப்புகளிலிருந்தும்  ஏழு நட்பு நாடுகளைச் சேர்ந்த 42 அதிகாரிகள் உட்பட மொத்தம் 374 அதிகாரிகள்  இந்திய ராணுவ அகாடமியில் வெற்றிகரமாகப் பயிற்சி நிறைவுசெய்தனர். பயிற்சி நிறைவுசெய்த அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களின் பிள்ளைகளுக்கு இந்திய ராணுவத்தில் நிரந்தரப் பதவி வழங்கப்பட்ட முக்கியமான சந்தர்ப்பத்தைக் குறிக்கும் விழாவைக் கொண்டாடினர்.

தலைமைத்துவம், சுய கட்டுப்பாடு, போர்க் கலை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கும் முதன்மை நிறுவனமான இந்திய ராணுவ அகாடமியில் கடுமையான பயிற்சியின் உச்சக்கட்டத்தை இந்த விழா குறிக்கிறது. இந்திய ராணுவ அகாடமியின் பயிற்சி, ராணுவத்தின் தலைமைத்துவத்திற்கு தேவையான அறிவு, தார்மீக மற்றும் உடல் கட்டுமானத்தின் உகந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய ராணுவ தலைமைத்துவத்திற்கு அடிப்படையான தேசப்பற்று, ஒழுக்கம், சுறுசுறுப்பு, முன்முயற்சி, சரியான புரிதல் ஆகியவற்றில் இந்திய ராணுவ அகாடமி பயிற்சி அளிக்கிறது.

இந்த நிகழ்வில் பேசிய ராணுவத் தளபதி,  ராணுவ வீரர் எனும் பணி அனைத்துப்  பணிகளிலும் உன்னதமானது.  சீருடையணிந்து உங்கள் தாய்நாட்டிற்கு தன்னலமற்ற பக்தியுடன் சேவை செய்ய  தனித்துவமான ஒரு வாய்ப்பை இது வழங்குகிறது என்றார். கடமையின் அழைப்பிற்கு அப்பால், நோக்கத்தின் உணர்வால் இயக்கப்படும் இந்தப் பணி,  உங்களிடமிருந்து தியாகங்களை எதிபார்க்கிறது. வரவிருக்கும் ஆண்டுகளில், உங்களின் எதிர்ப்பாற்றல்,   மனவுறுதி, ஊசலாட்டம் இல்லாத செயல்பாடு  ஆகியவை, இந்திய ராணுவம் அதன் அனைத்து முயற்சிகளிலும், தொடர்ந்து மூவண்ணக் கொடியை  பெருமைப்படுத்தும் அடித்தளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பயிற்சி நிறைவுசெய்த அதிகாரிகளின் பெற்றோர்களுக்கும் பாராட்டு தெரிவித்த ராணுவத் தளபதி, நட்பு நாடுகளிலிருந்து ராணுவ அதிகாரி பயிற்சி பெற்று செல்வோர் இந்தியாவிற்கும் தங்களின் நாடுகளுக்கும் இடையே தூதர்களாக விளங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிறந்த முறையில் பயிற்சி பெற்ற அணி மற்றும் தனி வீரர்களுக்கு வாள் மற்றும் பதக்கங்களை ராணுவத் தளபதி வழங்கினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இளம் லெப்டினன்ட்கள் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள தங்களுக்கான பிரிவுகளில் இணைவார்கள்.

திவாஹர்

Leave a Reply