மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிங்கப்பூர் கல்வி அமைச்சருடன் சந்திப்பு: கல்வி மற்றும் திறன்மேம்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை.

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தமது மூன்று நாள் சிங்கப்பூர் பயணத்தின் நிறைவு நாளான இன்று (31.05.2023) அந்நாட்டு கல்வி அமைச்சர் திரு சான் சுன் சிங்க்-கை சந்தித்து பேசினார். கல்வி மற்றும் திறன்மேம்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

பள்ளி நிலையில் இருந்தே தொழில் கல்வி மற்றும் திறன் பயிற்சியை வழங்குவதில் சிங்கப்பூருடன் இணைந்து இந்தியா செயல்பட முடியும் என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார். தற்போது இரு நாடுகளுக்கும், கல்வித்துறையில் உள்ள ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்த இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவில் நடைபெற்ற ஜி20 கல்விப் பணிக்குழுக் கூட்டங்களில் சிங்கப்பூர் அமைச்சர் பங்கேற்றதற்கு திரு தர்மேந்திர பிரதான் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளும் இயற்கையான நட்பு நாடுகள் என்றும். இருதரப்பு மற்றும் உலகளாவிய வளத்திற்காக இணைந்து செயல்பட இரு நாடுகளும் உறுதிப்பூண்டுள்ளதாக அவர் கூறினார்.

தமது மூன்று நாள் பயணத்தின் போது, சிங்கப்பூர் தொழில் துறை அமைச்சர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரையும் திரு தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேசினார். அந்நாட்டில் உள்ள பல்வேறு உயர் கல்வி  நிறுவனங்களுக்கும் அவர் சென்றார். சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும்  அங்கு பணிபுரியும் ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் படித்த முன்னாள் மாணவர்களுடனும் திரு தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார்.

திவாஹர்

Leave a Reply