இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் 19-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றினார்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஹரியானாவின் கர்னாலில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-NDRI) 19-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (ஏப்ரல் 24, 2023) கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், நமது நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பால் உற்பத்தித் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். பால் உற்பத்தித் துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.  அத்துடன் இந்தியாவில் உள்ள சுமார் 8 கோடி குடும்பங்களுக்கு இத்துறை வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று அவர் கூறினார். தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் (என்.டி.ஆர்.ஐ) போன்ற நிறுவனங்கள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

பசுக்கள் மற்றும் பிற கால்நடைகள் இந்திய சமூகம் மற்றும் மரபுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். அதிக பால் தரும் எருமைகள் மற்றும் பசுக்களின் நகல் மரபணுக்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை என்.டி.ஆர்.ஐ உருவாக்கியுள்ளதை அவர் குறிப்பிட்டார். இது கால்நடைகளின் பால் உற்பத்தித் திறனை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பால் மற்றும் பால் பொருட்கள் எப்போதுமே இந்திய உணவு மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன என்று குடியரசுத்தலைவர் கூறினார். உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா என அவர் தெரிவித்தார். ஆனால், பால் பொருட்களின் தேவை மேலும் அதிகரித்து வருவதால் நாம் சவால்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார். இது தவிர, தரமான தீவனம் கிடைப்பது, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வானிலை மாற்றம், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் போன்ற சவால்களையும் பால்பண்ணைத் துறை சந்தித்து வருகிறது என அவர் தெரிவித்தார். பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணைத் தொழிலை நிலையானதாக மாற்றுவது நம் முன் உள்ள சவாலாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். விலங்குகளின் நலனை மனதில் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காலநிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை பின்பற்றி பால் உற்பத்தியை மேம்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறினார். பால் பண்ணைகளில் இருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்க என்டிஆர்ஐ பல்வேறு தொழில்நுட்பங்களை ஊக்குவித்து வருவதை அவர் குறிப்பிட்டார். இதனுடன், உயிரி எரிவாயு உற்பத்தி போன்ற தூய்மை எரிசக்திக்கும் என்டிஆர்ஐ முக்கியத்துவம் அளித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பால் உற்பத்தித் தொழிலை நிர்வகிப்பதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதில் இந்தத் துறை மிக முக்கியப் பங்காற்ற முடியும் என அவர் கூறினார். எனவே இது தொடர்பான கல்வி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் தெரிவித்தார். பால் உற்பத்தித் துறையில் தொழில் தொடங்க பெண்களுக்கு எளிதாக கடன் வழங்கப்படுவதுடன் சந்தை அணுகலை மேலும் எளிதாக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு கூறினார்.

திவாஹர்

Leave a Reply