முப்பெரும் விழா!-திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு!-ஓ.பி.எஸ்.எதிர்காலம் என்னாகும்?!

செல்வி ஜெ.ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அஇஅதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் நம்பிக்கை நட்சத்திரமாக பவ்வியமாக படை பரிவாரங்களோடு வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் இன் அரசியல் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறிப்போனது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ‘சிரிப்பதற்கு ஒரு காலம்; அழுவதற்கு ஒரு காலம்’ நிச்சமாக வரும்.

குளம் தான் வற்றிவிட்டதே என்று கொக்கு கொண்டாடவும் கூடாது. தண்ணீர் தான் வந்துவிட்டதே என்று மீன் துள்ளவும் கூடாது. அதோ கோடை காலம், குளிர் காலம், இலையுதிர்காலம், வசந்த காலம் என்று மாறி மாறி வரத்தான் செய்யும். இதுதான் இயற்கையின் நீதி. இந்த விதி மனிதனுக்கு மட்டுமல்ல; உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. ஆனால், சிரிக்கவும், சிந்திக்கவும் தெரிந்தது மனித உயிர்கள் மட்டும்தான்.

ஆம், சிரிப்பு தான் மனித சமூகத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து. சாதி, சமயம், மொழி, ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் பொதுவாகப்  பயன்படுத்தும் ஒரே மொழி சிரிப்பு மட்டும்தான்.

அன்பு, மௌனம், காதல் என்று நீளும் பட்டியலில் சிரிப்புக்கும் சிறப்பான ஓர் இடம் உண்டு. மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த வார்த்தைகளற்ற முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு மட்டும்தான். அகில உலகத்துக்கும் பொதுவான மொழி சிரிப்பு, சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு, மனிதன்தான். பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு    

சிந்தை மயங்கி விட்டால் மனதில் அமைதியும், நிம்மதியும் பறிபோய் விடும். சிரிக்கும் தன்மை இயல்பாகவே மனிதனிடத்தில் இருந்து மறைந்துவிடும்.

ஒவ்வொரு உயிரினமும் மகிழ்ச்சியை விதவிதமாக  வெளிப்படுத்தி வந்துள்ளன. மனிதனே எல்லா உயிரினும் மேம்பட்டவன், அவனிடமே ஐம்பொறி அறிவோடு மனம் என்னும் ஆறாவது அறிவும் உள்ளது. அவனே பண்புடையவன். சிரிப்பு என்பது பண்புடையவர்கள் செயல், என்பதாலே  பண்புடைமை அதிகாரத்தில்

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்!.-என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

ஆம், அந்த வகையில் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சிரிப்பதையும், சிந்திப்பதையும் ஓ.பன்னீர்செல்வம்-(ஓபிஎஸ்) முற்றிலுமாக இழந்து விட்டார். கட்டிக்கொடுத்த கட்டுச் சோறும் சொல்லிக் கொடுத்த புத்தி மதியும் கடைசி வரைக்கும் வராது என்பதை இன்றுவரை அவர் உணர மறுத்ததின் விளைவுதான் இத்தனை அவமானங்களுக்கும், துயரங்களுக்கும் அடிப்படை காரணம்.

அரசியல் தரகர்களையெல்லாம் அறிவாளிகள் என்று ஓ.பி.எஸ். இன்றுவரை நம்பிக்கொண்டு இருக்கிறார். ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டிருக்கும் பரிதாப நிலை உலகில் வேறு எந்த மனிதருக்கும் ஏற்படக்கூடாது. ஆம், நம்பக் கூடாதவர்களை நம்புவதும்; நம்பிக்கைக்கு உரியவர்களை சந்தேகப்படுவதும் மிகப் பெரிய ஆபத்தையும், அவமானத்தையும் உண்டாக்கும் என்பதற்கு ஓபிஎஸ் மிகச்சிறந்த உதாரணம்.

எப்போதெல்லாம் சரியான முடிவு எடுக்க வேண்டுமோ, அப்போதெல்லாம் மற்றவர்களின் சொல் பேச்சு கேட்டு தவறான முடிவுகளை ஓபிஎஸ் தொடர்ந்து எடுத்து வருகிறார். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மிக விரைவில் ஓபிஎஸ் அரசியல் அனாதையாக ஆக்கபட்டுவிடுவார்.

யாரை எதிர்த்து ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கினாரோ; அவர்களிடமே சரணாகதி அடைய வேண்டிய கட்டாயமும், தர்ம சங்கடமும் அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இதைவிட அவமானம் வேறு என்ன இருக்க முடியும்?

எடப்பாடி கே பழனிச்சாமியை எதிர்த்து தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வரும் ஓபிஎஸ், அது தனக்கு சாதகமாக அமையாது என்று உறுதியாக தெரிந்தவுடன், தற்போது மக்களை திரட்டி தன் செல்வாக்கை நிரூபிக்க முயற்சித்து வருகிறார்.

அவற்றின் முதல் கட்ட நடவடிக்கைதான் இன்று (24.04.2023) திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் முப்பெரும் விழா. இது எந்த வகையிலும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலன் அளிக்காது.

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, திருச்சி மாநகர காவல்துறையில் கொடுக்கப்பட்டுள்ள புகாருக்கு, திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள மனு ரசீது.

எடப்பாடி கே பழனிச்சாமியை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு அஇஅதிமுக கட்சிக்கும், தொண்டர்களுக்கும் ஓபிஎஸ் தொடர்ந்து தீங்கிழைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு தான் இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

தனது முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டவுடன் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி , ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் அதில் இறுதிவரை உறுதியாக இருந்திருக்க வேண்டும். அதில் அவர் உறுதியாக இல்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு ஒத்துக் கொண்டு, எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக என்றைக்கு ஓபிஎஸ் பதவி பிரமாணம் செய்து கொண்டாரோ, அன்றைக்கே அவரது உண்மை சுயரூபம் தமிழ்நாட்டு மக்களுக்கு அம்பலம் ஆகிவிட்டது.

செல்வி ஜெ.ஜெயலலிதாவால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ், அந்த தகுதியை மறந்து, எடப்பாடி கே. பழனிச்சாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒத்துக்கொண்டது ஓபிஎஸ் செய்த மிகப்பெரிய தவறு.

அப்போது அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

அம்மாவின் மர்ம மரணத்தில் இறுதி முடிவு தெரியும் வரை கட்சியிலையோ, ஆட்சியிலையோ நான் எந்த பதவியும் வகிக்க மாட்டேன். அதுவரை நான் ஒரு சாதாரண அதிமுக தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் என்று ன்று பகிரங்கமாக அறிவித்து இருந்தால், இன்று ஓபிஎஸ் இன் செல்வாக்கு தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வானளவிற்கு உயர்ந்திருக்கும் . ஆனால், அவர் அப்போது அப்படி எதுவும் செய்யவில்லை.

சரி, அதன் பிறகு ஆவது செல்வி ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெற்ற ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு எந்த வாய்தாவும் வாங்காமல் தனது தர்ம யுத்தத்தில் சொன்னவாறு வாக்கு மூலம் அளித்து இருக்க வேண்டும். ஆனால், அதையும் ஓபிஎஸ் நேர்மையாக செய்யவில்லை.

2021 இல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஆதரவாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தீவிரமாக தேர்தல் பணியாற்றி இருந்தால் நிச்சயமாக அதிமுக ஆட்சியை கைப்பற்றி இருக்கும். அதையும் ஓபிஎஸ் செய்யவில்லை.

எடப்பாடி கே பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளர் என்பதால், மீண்டும் அதிமுக வெற்றி பெற்றால், எடப்பாடி கே.பழனிச்சாமி முதலமைச்சர் ஆகிவிடுவார் என்பதால், அது நடந்து விடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார்.

இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகள் ஓபிஎஸ் மீது இன்னும் இருந்து வருகிறது. அவற்றின் விளைவாகத்தான் வேறு வழியின்றி ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். திமுகவின் ஆதரவு நிலைபாட்டை அவர் எடுத்துவிட்டார் என்று தெரிந்தவுடன், ஒற்றைத் தலைமை தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு எடப்பாடி கே பழனிச்சாமி வந்துவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக நடந்த பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.

அதன் பிறகு ஓபிஎஸ் தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு அதுவும் அவருக்கு சாதகமாக அமையவில்லை. தற்போது மக்களை தேடி வந்திருப்பதாக கூறி வருகிறார்.

எது எப்படி இருப்பினும் ஓபிஎஸ் ஒரு இறுதி முடிவுக்கு இப்போது வந்தாக வேண்டும். ஒன்று தனிக் கட்சி தொடங்க வேண்டும். இல்லையென்றால், தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய வேண்டும். இதில் எந்த முடிவை ஓபிஎஸ் எடுத்தாலும், இழந்த செல்வாக்கை மீண்டும் அவரால் மீட்க முடியாது.

இதற்கு வேறு என்னதான் வழி? மறுபடியும் அவர் தாய் கழகமான அதிமுகவில் இணைவது தான் அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், அதிமுகவிற்கும் பலம் உள்ளதாகவும் , பலன் உள்ளதாகவும் அமையும்.

அதற்கான முயற்சியை ஓபிஎஸ் உடனே முன்னெடுக்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தன்னிடம் இருக்கும் ஆதரவாளர்கள் தாய் கழகமான அதிமுகவில் பகிரங்கமாக மீண்டும் இணைந்து விடுவார்கள். பிறகு ஓபிஎஸ் தனி மரமாகதான் நிற்க வேண்டிய சூழல் உருவாகும்.

இதற்கு எடப்பாடி கே.பழனிச்சாமியும், அவரது ஆதரவாளர்களும் ஒத்துக் கொள்வார்களா? என்ற மிகப் பெரிய சந்தேகம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, செல்வி ஜெ ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட அதிமுக பிளவு படுவதையோ, சிதறுண்டு போவதையோ நான் விரும்பவில்லை.கட்சி மற்றும் தொண்டர்களின் எதிர்காலம் கருதி அதிமுக ஒன்றுபட்டு செயல்படுவதை நான் மனதார விரும்புகிறேன். அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு எடுத்த முடிவுகளையும், தீர்மானங்கiளையும் நான் மனமார ஏற்றுக்கொள்கிறேன். இந்த பூமியில் இருக்கும் வரை, நான் இறக்கும் வரை அதிமுகவின் அடிமட்ட தொண்டனாகவே இருக்க நான் விரும்புகிறேன். இதுவரை நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லதாகவே இருக்கட்டும். இப்படி மனம் திறந்த மடல் ஒன்றை அதிமுக தலைமைக்கு ஓபிஎஸ் அனுப்பி வைத்தால். அதிமுகவில் ஓபிஎஸ்க்கு உரிய மதிப்பு, மரியாதையும் நிச்சயமாக மீண்டும் கிடைக்கும்.

இதைத் தவிர ஓ பன்னீர்செல்வம் வேறு எந்த முடிவு எடுத்தாலும் அவரது அரசியல் பொது வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com

Leave a Reply