தொழில்நுட்ப இடையீடு மற்றும் தேன்/ தேனீ வளர்ப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் பயிலரங்கம்.

தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் “தொழில்நுட்ப இடையீடு மற்றும் தேன்/ தேனீ வளர்ப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பயிலரங்கம் ஒன்றை நேற்று (12.04.2023) புதுதில்லியில் நடத்தியது. தேனீ வளர்ப்புத் துறையில் ஈடுபடும் புத்தொழில் நிறுவனங்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தேனீ வளர்ப்புத் துறையின் பங்குதாரர்கள், பல்வேறு அமைச்சகங்கள்/ அரசு நிறுவனங்கள், மாநில தோட்டக்கலைத் துறை, மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், மத்திய வேளாண் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் உட்பட சுமார் 600 பேர் நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

தேன் மற்றும் இதர பொருட்களின் மூலம் கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கு தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் உள்ள பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி அறிவியல் ரீதியாக தேனீ வளர்ப்பில் ஈடுபடுமாறு தோட்டக்கலைத் துறை ஆணையர் டாக்டர் பிரபாத் குமார் கேட்டுக்கொண்டார். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேனீ வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தேனுக்கு புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலை மேன்மை அடைந்து தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அதன் தேவை பெருகும் என்று பயிலரங்கில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மார்த்தாண்டம் தேன் என்ற உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் இயக்குநர் திரு ஜெயக்குமார் தெரிவித்தார். தங்களது பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு  அனைத்து பங்குதாரர்களும் முயல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு தான் விண்ணப்பித்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை பரிசீலித்து வருவதாகவும் திரு ஜெயக்குமார் கூறினார்.

திவாஹர்

Leave a Reply