நெகிழிப்பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலின் இந்த 98ஆவது பகுதியில் உங்களனைவரோடும் இணைவதில் எனக்கு ஈடில்லா மகிழ்ச்சி.  சதம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம், மனதின் குரலை நீங்கள் அனைவரும் உங்களுடைய பங்களிப்பால் ஒரு அற்புதமான மேடையாக மாற்றியிருக்கிறீர்கள்.  ஒவ்வொரு மாதமும், எத்தனையோ இலட்சக்கணக்கான செய்திகள் வாயிலாக, பல்வேறு மக்களின் உள்ளத்தின் குரல்கள் என்னை வந்தடைகின்றன.  நீங்கள் உங்களுடைய மனதின் சக்தியை நன்கறிவீர்கள்; அதைப் போலவே சமூக சக்தியானது எவ்வாறு தேசத்தின் சக்தியை அதிகரிக்கிறது என்பதை மனதின் குரலின் பலப்பல பகுதிகளில் கவனித்திருக்கிறோம், புரிந்து கொண்டிருக்கிறோம், இவற்றை நானும் அனுபவித்திருக்கிறேன், ஏற்றுக் கொண்டும் இருக்கிறேன்.  எனக்கு இன்னும் அந்த நாள் நினைவில் இருக்கிறது…… அன்று தான் நாம் மனதின் குரலிலே, பாரதத்தின் பாரம்பரியமான விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிப்பது பற்றிப் பேசினோம், அல்லவா?   உடனடியாக பாரதநாட்டு விளையாட்டுக்களோடு இணைவது, அதில் திளைப்பது, அவற்றைக் கற்றுக் கொள்வது பற்றிய எழுச்சி நாட்டில் உருவானது.  மனதின் குரலில் நாம் பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் பற்றிப் பேசிய போது, நாட்டுமக்கள் இதற்கும் கூடத் தங்கள் கைகளாலேயே மெருகேற்றினார்கள்.  இப்போது பாரத நாட்டு விளையாட்டுப் பொருட்கள் மீது எந்த அளவுக்கு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அயல்நாடுகளிலும் இவற்றுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது.  மனதின் குரலில் பாரத நாட்டுப் பாரம்பரியங்களில் ஒன்றான கதை சொல்லுதல் பற்றி நாம் பேசினோம், உடனடியாக இதன் புகழ் தொலை தூரங்களையும் சென்றடைந்து விட்டது.  மக்கள் மிக அதிக அளவில் பாரத நாட்டுக் கதை சொல்லும் முறைகளின்பால் ஈர்க்கப்படத் தொடங்கினார்கள். 

நண்பர்களே, சர்தார் படேலின் பிறந்த நாளான ஒற்றுமை தினம் தொடர்பாக நாம் மனதின் குரலில் மூன்று போட்டிகள் பற்றிப் பேசினோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  இந்தப் போட்டிகள், தேசபக்திப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் மற்றும் ரங்கோலி என்ற கோலம் போடுதலோடு தொடர்புடையன.  நாடெங்கிலும் இருந்து 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரளாக இதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூறும் போது பேருவகை எனக்கு ஏற்படுகிறது.  சிறுவர்கள், பெரியோர், மூத்தோர் என இதில் அனைவரும் பெரும் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் தங்களுடைய நுழைவுகளை அனுப்பி இருக்கிறார்கள்.  இந்தப் போட்டிகளில் பங்கெடுக்கும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள்.   உங்களில் ஒவ்வொருவருமே ஒரு சாம்பியன் தான், கலையின் சாதகர் தாம்.  நம்முடைய தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தின் மீது உங்கள் இதயங்களில் எத்தனை பிரேமை இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

நண்பர்களே, இன்று இந்தச் சந்தர்ப்பத்தில் லதா மங்கேஷ்கர் அவர்கள், லதா அக்காவின் நினைவு எழுவது என்பது மிகவும் இயல்பான விஷயம் தான்.  ஏனென்றால் இந்தப் போட்டி தொடங்கிய வேளையில், அன்றைய நாளன்று தான் லதா அக்கா ஒரு ட்வீட் வாயிலாக, நாட்டுமக்களிடம் இந்த நிகழ்ச்சியோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நண்பர்களே, தாலாட்டு எழுதும் போட்டியிலே முதல் பரிசினை, கர்நாடகத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.எம். மஞ்சுநாத் அவர்கள் வென்றிருக்கிறார்.  கன்னட மொழியில் எழுதப்பட்ட இவருடைய தாலாட்டுப் பாடலான மலகு கந்தாவிற்காக இவர் இந்தப் பரிசினை வென்றிருக்கிறார்.  இதை எழுதும் உத்வேகம் தனது தாய், பாட்டி ஆகியோர் பாடிய தாலாட்டுப் பாடல்களால் இவருக்குக் கிடைத்திருக்கிறது.   நீங்களும் இதைக் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கும் மிக ஆனந்தமாக இருக்கும். 

உறங்கி விடு, உறங்கி விடு, செல்லமே,

என் புத்திசாலிச் செல்லமே, உறங்கி விடு,

பகல் கடந்து போச்சுது இரவு வந்தாச்சுது

உறக்க மங்கை இப்ப வந்துடுவா.

நட்சத்திரத் தோட்டத்திலிருந்து,

கனவுகளைக் கொண்டு வருவா,

உறங்கி விடு, உறங்கி விடு.

ஜோஜோ…. ஜோ…. ஜோ…

ஜோஜோ…. ஜோ…. ஜோ….

     அஸாமின் காமரூபம் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய தினேஷ் கோவாலா அவர்கள் இந்தப் போட்டியிலே இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார்.  இவர் எழுதியிருக்கும் தாலாட்டுப் பாடலில் வட்டார மண் மற்றும் உலோகப் பாத்திரங்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களின் பிரபலமான கைவினைத்திறத்தின் முத்திரை இருக்கிறது.

பானை செய்யும் தாத்தா பையோடு வந்திருக்காரு,

பையில அந்தப் பையில என்ன இருக்குது?

பானைத் தாத்தா பையைத் திறந்து பார்த்தாக்க,

பையுக்குள்ள இருந்திச்சுது ஒரு அழகு சட்டுவம்!

எங்க பாப்பா கேட்டா, பானை தாத்தா சொல்லு,

இந்த அழகு சட்டுவம், சொல்லு எப்படி ஆச்சுது!!

பாடல்கள், தாலாட்டுப் பாடல்களைப் போலவே கோலப்போட்டியும் கூட மிகவும் விரும்பப்பட்டதாக இருந்தது.  இதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவுக்கு அழகான கோலங்களைப் போட்டு அனுப்பியிருந்தார்கள்.  இதிலே வெற்றி பெற்ற நுழைவு, பஞ்சாபின் கமல் குமார் அவர்களுடையது தான்.  இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், உயிர்த்தியாகி வீரன் பகத் சிங்கின் மிகவும் அழகான கோலத்தை வரைந்திருந்தார்.  மகாராஷ்டிரத்தின் சாங்க்லியின் சச்சின் நரேந்திர அவசாரி அவர்கள் தனது கோலம் வாயிலாக ஜலியான்வாலா பாக், அங்கு அரங்கேறிய படுகொலை, உயிர்த்தியாகி உதம் சிங்கின் தைரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.  கோவாவில் வசிக்கும் குருதத் வாண்டேகர் அவர்கள் காந்தியடிகள் தொடர்பான கோலத்தை ஏற்படுத்தியிருந்தார்.  புதுச்சேரியைச் சேர்ந்த மாலதி செல்வம் அவர்களும் கூட சுதந்திரத்தின் பல மகத்தான வீரர்கள் மீது தனது குவிமையத்தைச் செலுத்தியிருந்தார்.  நாட்டுப்பற்றுப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர் டி. விஜய் துர்க்கா, இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.  இவர் தெலுகுவில் தனது நுழைவை அனுப்பியிருந்தார்.  இவர் தனது பகுதியில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரரான நரசிம்ம ரெட்டி காருவினால் அதிகக் கருத்தூக்கம் பெற்றிருக்கிறார்.  நீங்களே கேளுங்களேன், விஜய் துர்க்கா அவர்களின் நுழைவின் ஒரு பகுதியை.

ரேனாடு பகுதியின் சூரியனே,

வீரம் நிறைந்தவனே நரசிம்மா!

சுதந்திரப் போராட்டத்தின் அச்சாணியே, ஆணிவேரே!

பரங்கியனின் கொடுமையான அடக்குமுறை பார்த்து

உன் குருதி கொதித்தது, நெஞ்சு தீயில் வெந்தது!

ரேனாடு பகுதியின் சூரியனே,

வீரம் நிறைந்தவனே நரசிம்மா!!

தெலுகுவிற்குப் பிறகு, இப்போது, உங்களுக்கு ஒரு மைதிலி மொழிப் பகுதியைப் பற்றிக் கூறுகிறேன்.  இதை தீபக் வத்ஸ் அவர்கள் அனுப்பியிருக்கிறார்.  இவரும் கூட இந்தப் போட்டியில் பரினை வென்றிருக்கிறார்.   

பாரின் பெருமை பாரதம் அண்ணே,

மாட்சிமை உடையது நம் நாடண்ணே,

மூன்று திசையிலும் கடல்கள் சூழும்,

வடக்கில் இமயம் பலமாய் இருக்கும்,

கங்கை யமுனை கிருஷ்ணை காவிரி,

கோசி, கமலா பலான் நதிகள் ஆகும்.

மாட்சிமை உடையது நம் நாடண்ணே,

மூவண்ணத்திலே நம் உயிர்கள் உறையும்.

     நண்பர்களே, எனக்கு நம்பிக்கை இருக்கிறது, உங்களுக்கும் இவை கண்டிப்பாகப் பிடித்திருக்கும்.  போட்டியில் இடம் பெற்றிருக்கும் இவை போன்ற நுழைவுகளின் பட்டியல் மிகவும் நீளமானது.  நீங்கள், கலாச்சார அமைச்சகத்தின் இணையத்தளத்திற்குச் சென்று, இவற்றை உங்கள் குடும்பத்தாரோடு பாருங்கள், கேளுங்கள், உங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இவை இருக்கும். 

     எனதருமை நாட்டுமக்களே, விஷயம் பனாரஸ் பற்றியதாக இருந்தாலும், ஷெஹனாய் பற்றியதாக இருந்தாலும், உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் அவர்களைப் பற்றியதாக இருந்தாலும், என்னுடைய சிந்தையானது இயல்பாகவே அதை நோக்கிச் சென்றுவிடும்.  சில நாட்கள் முன்பாக, உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் இளைஞர் விருதுகள் அளிக்கப்பட்டன.  இந்த விருதானது இசை மற்றும் நிகழ்த்துக் கலைகள் துறையில் உயர்ந்துவரும் திறமைமிக்கக் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.  இது கலை மற்றும் இசையுலகின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதோடு, இதன் வளத்திற்கும் தனது பங்களிப்பை அளித்து வருகின்றது.  எந்த இசைக்கருவிகளின் புகழ் காலப்போக்கில் மங்கத் தொடங்கியிருக்கிறதோ, அவற்றில் யார் புத்துயிரைப் புகுத்தியிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள்.  நீங்கள் அனைவரும் இந்த மெட்டினைக் கவனமாகக் கேளுங்கள்…….   

இந்த இசைக்கருவி என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?  உங்களுக்கு இது என்ன என்பது தெரியாமல் இருக்கலாம்.  இந்த இசைக்கருவியின் பெயர் சுரசிங்கார் ஆகும், இந்த மெட்டினை ஏற்படுத்தியிருப்பவரின் பெயர் ஜாய்தீப் முகர்ஜி.  ஜாய்தீப் அவர்கள், உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் விருதினைப் பெறும் இளைஞர்களில் ஒருவராவார்.  இந்தக் கருவியின் இசையைக் கேட்பது என்பதே கடந்த 50கள், 60களுக்குப் பிறகு இயலாத ஒன்றாகி விட்டது.  ஆனால் ஜாய்தீப் அவர்கள், சுரசிங்காரை மீண்டும் பிரபலமடையச் செய்வதில் முழு ஈடுபாட்டாடு இறங்கியிருக்கிறார்.  இதைப் போலவே சகோதரி, உப்பலப்பு நாகமணி அவர்களின் முயற்சியும் கூட மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது, இவருக்கு மாண்டலின் கருவியில் கர்நாடக இசைக்காக விருது அளிக்கப்பட்டு இருக்கிறது.  இதைப் போலவே சங்க்ராம் சிங் சுஹாஸ் பண்டாரே அவர்களுக்கும் வார்க்கரி கீர்த்தனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.  இந்தப் பட்டியலில் இசையோடு இணைந்த கலைஞர்கள் மட்டுமே இல்லை.  வீ துர்க்கா தேவி அவர்கள், மிகப் பழமையான நாட்டிய வகையான கரகாட்டத்திற்காக இந்த விருதினைப் பெறுகிறார்.  இந்த விருதின் மேலும் ஒரு வெற்றியாளர், ராஜ் குமார் நாயக் அவர்கள், தெலங்கானாவின் 31 மாவட்டங்களில், 101 நாட்கள் வரை நடக்கக்கூடிய பேரினி ஓடிசி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.  இன்று, மக்கள் இவரை பேரினி ராஜ்குமார் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள்.  பேரினி நாட்டியம், பகவான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாட்டியம், இது காகதீய வம்சம் கோலோச்சிய காலத்தில் மிகவும் பிரபலமானதாக இருந்தது.  இந்த வம்சத்தின் வேர்கள் இன்றைய தெலங்கானாவோடு தொடர்புடையது.  விருதைப் பெறும் மேலும் ஒரு வெற்றியாளர் சைகோம் சுர்சந்திரா சிங் அவர்கள்.  இவர் மைதேயி புங் இசைக்கருவியைத் தயாரிப்பதில் வல்லவர் என்று அறியப்படுகிறார்.   இந்த இசைக்கருவி மணிப்பூரோடு தொடர்புடையது. பூரன் சிங் ஒரு மாற்றுத்திறனாளிக் கலைஞர், இவர் ராஜூலா-மலுஷாஹி, ந்யௌலி, ஹுட்கா போல், ஜாகர் போன்ற பலவகைப்பட்ட இசை வடிவங்களையும் பிரபலமாக்கிக் கொண்டு வருகிறார்.  இவற்றோடு தொடர்புடைய பல ஒலிப்பதிவுகளையும் இவர் தயாரித்திருக்கிறார்.  உத்தராக்கண்டின் நாட்டுப்புற இசையில் தனது புலமையை வெளிப்படுத்தி பூரன் சிங் அவர்கள் பல விருதுகளை வென்றிருக்கிறார்.   போதிய அவகாசம் இல்லாமையால், விருது பெறும் அனைவரின் விபரங்களையும் என்னால் கூற முடியவில்லை; ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றிக் கண்டிப்பாகப் படித்துப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  அதே போல, இந்தக் கலைஞர்கள் அனைவரும், நிகழ்த்துக் கலைகளை மேலும் பிரபலப்படுத்த, வேர்கள் மட்டத்தில் அனைவருக்கும் உத்வேகம் அளித்து வருவார்கள்.

     என் மனம் நிறை நாட்டுமக்களே, வேகமாக முன்னேறி வரும் நமது தேசத்தின் டிஜிட்டல் இந்தியாவின் பலம், மூலை முடுக்கெங்கும் காணப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இண்டியாவின் சக்தியை வீடுகள் தோறும் அடையாளம் காணும் வகையிலே பல்வேறு செயலிகள் பெரும் பங்காற்றி வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு செயலி தான், ஈ-சஞ்சீவனி. இந்தச் செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை, அதாவது தொலைவான பகுதிகளில் இருந்தவாறே, காணொளி ஆலோசனை மூலமாக, மருத்துவர்களிடம் தங்கள் நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, இதுவரை தொலைபேசி ஆலோசனை செய்வோரின் எண்ணிக்கை பத்து கோடி என்ற எண்ணிக்கையையும் கடந்து விட்டது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், காணொளி ஆலோசனை வாயிலாக பத்து கோடிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள்!!  நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஒரு அலாதியான உறவு – இது ஒரு மிகப்பெரிய சாதனை.  இந்தச் சாதனைக்காக, நான் மருத்துவர்கள் அனைவருக்கும், இந்த வசதியால் பயனடையும் நோயாளிகளுக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply