ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஏனென்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தி.மு.க வினர் தேர்தல் களத்தில் இறங்கி தவறான செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள். ஆளும் தி.மு.க அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுவதை நாளுக்கு நாள் பார்க்க முடிகிறது.

இதனையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்காணித்து, கண்டித்து, நடவடிக்கை எடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

குறிப்பாக ஆளும் கட்சியினர் வாக்காளர்களை மிரட்டி, அவர்களை தனியார் இடங்களில் பல மணி நேரம் அடைத்து வைத்துள்ளனர். காரணம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு கேட்க வரும் போது அவர்களை பார்க்க விடாமல், பேச விடாமல் வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, தவறான முறையில் வாக்கு பெற நினைப்பது சரியல்ல. இதெல்லாம் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.

அதாவது ஜனநாயகத்திலே பணநாயக முறையில் ஆளும் தி.மு.க வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் செயல்படுவது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் ஆளும் ஆட்சியின் முறைகேடான செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் ஆளும் கட்சி உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளின் தவறான போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லையேல் வாக்காளிக்கக் கூடிய வாக்காளர்களும், பொதுமக்களும் ஆங்காங்கே சேர்ந்து ஆளும் கட்சியினரின் முறையற்ற செயலைத் தடுத்து நிறுத்தக்கூடிய நிலையே ஏற்படும்.

எனவே தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கேற்ப கண்காணித்து, முறைகேட்டை தடுத்து, அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தேர்தலை ஜனநாயக முறைப்படி, பொது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நியாயமாக நடத்த வேண்டும்.

மேலும் வெளியூரில் இருக்கும் வாக்காளர்களுக்கு பதிலாக ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்யும் திட்டத்தையும் தேர்தல் ஆணையம் கண்காணித்து உடனடியாக முறியடிக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply