மத்திய #பட்ஜெட் இந்திய நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான, வலிமை மிக்க நாடாக மாற்றக்கூடியதற்கான, இந்திய மக்களுக்கான பட்ஜெட்டாக அமைந்திருகிறது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

பாரதப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கும் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பதால் இதை இந்திய மக்களுக்கான, இந்தியாவின் வலிமைக்கான பட்ஜெட்டாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.

நாட்டிற்காக மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கும் 5 வது பட்ஜெட்டானது தொடர்ந்து மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், நாட்டு மக்களையும், நாட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகவே அமையும்.

இந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டானது இந்தியாவை வரும் காலங்களில் வளர்ச்சியடைய செய்வதற்கான, நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நாட்டு மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தியாகும்.

குறிப்பாக கடந்த கொரோனா காலத்தில் நாட்டு மக்களும், பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்படாமல் இருந்ததற்கும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்ததற்கும் காரணம் மத்திய நிதித்துறையின் திறமையான பொருளாதார நடவடிக்கைகள் தான். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் மிக மிக முக்கியமாக தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 இலட்சமாக உயர்த்தியிருப்பது மக்களுக்கு வரப்பிரசாதம், மேலும் வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளம் ஆகியவற்றுக்கு ரூ. 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம், 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், பெண்களுக்கு 7.5 % வட்டியில் சிறு சேமிப்புத் திட்டம், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி மையம் அமைக்க திட்டம், பசுமை வளர்ச்சிக்கு திட்டம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான திட்டம், நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லுரிகள் தொடங்குதல், பள்ளி மாணவர்களுக்கு பஞ்சாயத்து அளவில் டிஜிட்டல் நூலகங்கள் தொடங்குதல், புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம், 38,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், நகர்ப்புற உட்கட்டமைப்புக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ. 79,000 கோடி நிதி ஒதுக்கீடு, இளைஞர்கள் எதிர்காலம், திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள், மீனவர் நலனுக்கு ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கீடு, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ. 9,000 கோடி கடன் வழங்குதல், ரயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, போக்குவரத்துத்துறைக்கு 75,000 கோடி நிதி ஒதுக்கீடு, மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்குதல், முதியோர் வைப்புத்தொகை வரம்பு உயர்வு ஆகிய பல்வேறு முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பயன் பெறுவார்கள்.

அதாவது பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் வேளாண், கல்வி, தொழில், சுகாதாரம், இளைஞர் நலன், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறையின் வளர்ச்சிக்கான திட்டங்களால் அத்துறைகளும் முன்னேறி, மக்களும் பயனடைந்து, நாடும் வளம் பெறும், இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி 6.8 % மாக இருக்கும் என்பதும், நிதிப்பற்றாக்குறை குறைக்கப்படும் என்பதும் பட்ஜெட் உரையில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த பட்ஜெட்டை நடுநிலையோடு பார்த்தால் வரவேற்கத்தக்கதாக, பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது.

எனவே நடப்பு நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடைகோடி மக்கள், சாமானிய மக்கள், பெண்கள், இளைஞர், இதர பிற்படுத்தப்பட்டோர்,
பழங்குடியினர் என அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய,
நாட்டையும் வளம் பெறச்செய்யக்கூடிய,
வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்தக்கூடிய பட்ஜெட்டாக அமைந்திருப்பதால் த.மா.கா சார்பில் மத்திய பட்ஜெட்டை வரவேற்று, பாராட்டி, வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply