தேசிய மகளிர் ஆணையத்தின் நிறுவன தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.

தேசிய மகளிர் ஆணையத்தின் நிறுவன தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 31, 2023) பங்கேற்றார்.  

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் மகளிருக்கு அதிகாரமளித்தல் இல்லாமல், வலுவான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை கற்பனை செய்துகூட பார்க்க இயலாது என்றார். சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் என அனைத்து தளங்களிலும்  பெண்கள் உரிய பங்களிப்பை செலுத்தும் வகையில், நாம் அனைவரும் இணைந்து சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். மகளிருக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதி மட்டுமல்ல என்றும், பொருளாதார மேம்பாட்டுக்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். பணியாளர் எண்ணிக்கையில் பெண்களின் குறைந்த பங்களிப்பு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தடையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆண்,பெண் விகிதம் நாட்டின் சில பகுதிகளில் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் கூறினார். நாட்டின்  கல்வி அறிவு பெற்ற பகுதிகளில் கூட, பெண் சிசுக் கொலை நடைபெறுவது மோசமான உதாரணம் என்று அவர் தெரிவித்தார்.  இதுபோன்ற நிலைகளை மாற்றுவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், ஒட்டுமொத்த சமூகமும் இதில் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகளிருக்கு என தனியான ஆணையம் ஏன் தேவை என்ற கேள்வி எழுவது குறித்து, குடியரசு தலைவர் குறிப்பிடுகையில், இன்று நமது சகோதரிகளும், மகள்களும் விண்வெளியில் பறப்பதுடன், ஆயுதப்படைகளிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளதாக கூறினார். ஆனால், அதே சமயம் குடும்ப வன்முறை, பணியிடங்களில் துன்புறுத்தல்கள், பாலின பாகுபாடுகள் போன்றவற்றை அவர்கள் எதிர்கொள்வதாக தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குறிப்பிட்ட பிரச்சனைகளை அணுகி அவற்றுக்கு தீர்வு காண்பதற்காகவே, தேசிய மகளிர் ஆணையம் செயல்படுவதாக குடியரசு தலைவர் கூறினார். நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு உரிய மரியாதையையும், உரிமைகளையும் வழங்க மகளிருக்கு தனி ஆணையம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply