நாடாளுமன்ற இரு அவைகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை.

மாண்புமிகு உறுப்பினர்களே,

1.    இணைந்து இருக்கக்கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நமது நாடு விடுதலையின் 75-வது ஆண்டை நிறைவு செய்து ‘அமிர்த காலத்திற்குள்’ நுழைந்தது. இந்த ‘விடுதலையின் அமிர்த காலம்’ நமது புகழ்பெற்ற கடந்த காலங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டு பெருமையையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உத்வேகத்தையும், பொன்னான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டையும் ஒருங்கிணைக்கிறது.

2.    இந்த 25 ஆண்டுகளான ‘அமிர்த காலம்’, சுதந்திரத்தின் பொன்னான நூற்றாண்டு மற்றும் வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் காலகட்டம். நாமும் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நமது கடமைகளை அனைத்து நிலைகளிலும் மிகச் சிறப்பாக செய்வதற்கான காலகட்டம் தான் இந்த 25 ஆண்டு. ஒரு யுகத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்பு நம் முன்னே உள்ளது. அதற்காக நமது முழு திறனையும் வெளிப்படுத்தி தொடர்ந்து அயராது நாம் பணியாற்ற வேண்டும்.

•     போற்றத்தக்க கடந்த காலத்தை நினைவுகூர்வதுடன், நவீனத்துவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிய தேசத்தை 2047-ஆம் ஆண்டிற்குள் நாம் உருவாக்க வேண்டும்.

•     தன்னிறைவான, அதே வேளையில் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும்‌.

•     வறுமை அல்லாத, நடுத்தர வகுப்பினரும் செழிப்பாக இருக்கும் வகையிலான இந்தியா.

•     சமூகத்தையும் நாட்டையும் சரியான வழியில் கொண்டு செல்வதில் இளைஞர்களும் பெண்களும் முன்னிலை வகிப்பதோடு, காலத்திற்கு ஏற்ப துடிப்புடன் இருக்கும் இளைஞர்கள் அடங்கிய இந்தியா.

•     மேலும் வலுவான பன்முகத்தன்மை மற்றும் அசைக்க முடியாத ஒற்றுமையுடனான இந்தியா.

3.    2047-ஆம் ஆண்டில் இதனை நாடு நிறைவேற்றும்போது அதன் பிரம்மாண்டமான கட்டமைப்பின் அடித்தளத்தை மதிப்பிடவும் காணவும் முடியும். அப்போது விடுதலையின் அமிர்த காலத்தின் இது போன்ற ஆரம்பத் தருணங்கள் மாறுபட்ட கோணத்தில் நோக்கப்படும். எனவே இந்த தருணம் ‘அமிர்த காலத்தின்’ இந்தத் காலகட்டம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

4.    நாட்டு மக்கள் எனது அரசுக்கு முதன்முறையாக வாய்ப்பு தந்த போது ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற தாரக மந்திரத்தோடு நாங்கள் தொடங்கினோம். நாளடைவில் ‘அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்பது அதனுடன் சேர்க்கப்பட்டது. இந்த தாரக மந்திரம் தான் வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கு தற்போது ஊக்குவிக்கிறது. இன்னும் சில மாதங்களில் வளர்ச்சியின் இந்த கடமைப் பாதையில் எனது அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

5.    எனது அரசின் சுமார் 9 ஆண்டு காலங்களில் முதன் முறையாக ஏராளமான நேர்மறை மாற்றங்களை இந்திய மக்கள் சந்தித்துள்ளனர். ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கையும் இன்று உச்சத்தில் இருப்பதோடு, இந்தியா குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டம் மாறியிருப்பது மிகப்பெரிய மாற்றங்கள் ஆகும்.

•     ஒரு காலத்தில் தீர்வுகளுக்காக பிறரை எதிர்நோக்கி இருந்த இந்தியா, இன்று உலகம் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

•     பல தசாப்தங்களாக காத்துக் கொண்டிருந்த மக்கள் தொகையின் பெரும்பாலான பிரிவினருக்கு அடிப்படை வசதிகள் இந்த கட்டத்தில் செய்து தரப்பட்டன.

•     பல ஆண்டு காலங்கள் நாம் ஆவலோடு எதிர்பார்த்து வந்த நவீன உள்கட்டமைப்பு தற்போது நாட்டில் வளர தொடங்கியுள்ளது.

•     இந்தியா உருவாக்கியுள்ள டிஜிட்டல் இணைப்பு, வளர்ந்த நாடுகளுக்கு கூட ஊக்க சக்தியாக திகழ்கிறது.

•     மிகப்பெரிய ஊழல்கள் மற்றும் லஞ்சம் முதலியவற்றை அரசு திட்டங்களில் இருந்து களைய வேண்டும் என்ற நீண்ட கால எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறி வருகிறது.

•     பலவீனமான கொள்கை பற்றி தற்போது விவாதிக்கப்படுவதில்லை, மாறாக தனது விரைவான வளர்ச்சிக்காகவும் தொலைநோக்கு முடிவுகளுக்காகவும் இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது.

•     அதனால்தான் பத்தாவது இடத்திலிருந்து உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக நாம் வளர்ந்துள்ளோம்.

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் அடித்தளம் தான், இது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

6.    ‘காயகாவே கைலாசா’ அதாவது கர்மம் என்பது வழிபாடு, அதில் இருப்பவர் சிவன் என்று பகவான் பசவேஸ்வரா கூறியுள்ளார். அவரது வழியைப் பின்பற்றி தேச கட்டமைப்பில் எனது அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

•     நிலையான, துணிச்சலான முடிவு எடுக்கும் திறன் வாய்ந்த மிகப்பெரிய லட்சியங்கள் கொண்ட அரசு இன்று இந்தியாவில் உள்ளது.

•     நேர்மையை மதிக்கும் அரசை இந்தியா தற்போது பெற்றுள்ளது.

•     ஏழைகளின் பிரச்சினைகளுக்கும் அவர்களது நீண்ட கால அதிகாரமளித்தலுக்கும் நிலையான தீர்வுக்காக உழைக்கும் அரசு இன்று இந்தியாவில் உள்ளது.

•     முன் எப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாகவும் அதிகமாகவும் பணியாற்றும் அரசு தற்போது இந்தியாவில் உள்ளது.

•     புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசை இந்தியா இன்று பெற்றுள்ளது.

•     பெண்கள் எதிர் கொள்ளும் தடைகள் ஒவ்வொன்றையும் களையும் உறுதிப்பாட்டோடு இயங்கும் அரசு இந்தியாவில் தற்போது செயல்படுகிறது.

•     வளர்ச்சி மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் உறுதி பூண்டிருக்கும் அரசு தற்போது இந்தியாவில் உள்ளது.

•     பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் நவீனத்துவத்தைத் தழுவிய அரசு இந்தியாவில் இன்று இயங்குகிறது.

•     சர்வதேச அரங்கில் தனது நேர்மையான பங்களிப்பை வழங்குவதற்கு நம்பிக்கையுடன் முன்னேறும் அரசு இந்தியாவில் இன்று ஆட்சியில் உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

7.    நிலையான ஆட்சி அமைவதற்காக தொடர்ந்து இரண்டு முறைகள் வாக்களித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தீர்க்கமான அரசு, நாட்டின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதோடு, தேவை ஏற்படும் போது கொள்கைகள் மற்றும் உத்திகளை முற்றிலும் மாற்றி அமைக்கும் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளது. சர்ஜிகல் ஸ்டிரைக் முதல் தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான ஒடுக்குமுறை வரை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முதல் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரையில் ஒவ்வொரு தவறான செயல்களுக்கும் சரியான பதிலடி, பிரிவு 370 முதல் முத்தலாக் வரையிலான தடை என்று, எனது அரசு தீர்க்கமான அரசு என்று போற்றப்படுகிறது.

8.    நூறாண்டுகளில் மிகவும் மோசமான பேரிடரை எதிர்கொள்ளவும் அதற்கு பிறகு ஏற்பட்ட நிலையை சமாளிக்கவும் நிலையான மற்றும் தீர்க்கமான அரசு வழிவகை செய்துள்ளது. உலகம் முழுவதும் அரசியல்  நிலைத்தன்மை இல்லாத நாடுகள் மோசமான நெருக்கடிகளை இன்று சந்தித்து வருகின்றன. எனினும் தேச நலன் கருதி எனது அரசு எடுத்த முடிவுகளின் அடிப்படையில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேம்பட்ட நிலையிலே உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

9.    ஊழல் தான் ஜனநாயகம் மற்றும் சமூக நீதியின் மிகப்பெரிய எதிரி என்பதில் எனது அரசு ஸ்திரமான நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே கடந்த சில ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. நேர்மையானவர்கள்,  அமைப்புமுறையில் கௌரவிக்கப்படுவதை நாம் உறுதி செய்துள்ளோம். ஊழல் செய்பவர்கள் மீது அனுதாபம் காட்டக் கூடாது என்ற சமூக உணர்வு நாட்டில் அதிகரித்து வருகிறது.

10.   ஊழலற்ற சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு கடந்த சில ஆண்டுகளில் பினாமி சொத்து சட்டம் அறிவிக்கப்பட்டது. பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளிடமிருந்து பொருட்களை பறிமுதல் செய்வதற்காக தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசு இயந்திரத்தில் உள்ள பாரபட்சம் மற்றும் ஊழல் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சிறந்த அமைப்புமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் அரசு கொள்முதலுக்காக தற்போது அரசு மின்னணு சந்தை தளம் என்ற அமைப்புமுறை நடைமுறையில் உள்ளது. இதில் இதுவரை ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

11.   தேச கட்டமைப்பில் நேர்மையான பங்களிப்பை வழங்குவோர் தற்போது கௌரவிக்கப்படுகிறார்கள். சிக்கலான வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு நமது நாட்டு மக்கள் பயனடைந்துள்ளனர். தடையில்லாத மதிப்பீட்டை ஊக்குவிப்பதன் வாயிலாக வெளிப்படைத் தன்மையும் பொறுப்புடைமையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பு வரிகளை திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. இன்று வருமான வரித் தாக்கல் செய்த ஒரு சில நாட்களிலேயே குறிப்பிட்ட தொகை திரும்பப் பெறப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி தற்போது வெளிப்படை தன்மையைக் கொண்டு வந்திருப்பதோடு, வரி செலுத்துவோரின் கண்ணியத்தையும் உறுதி செய்கிறது.

12.   போலியான பயனாளிகளையும் மக்கள் நிதி- ஆதார்- செல்பேசி திட்டம் முதல் ஒரு தேசம், ஒரு குடும்ப அட்டை திட்டத்தின் அறிமுகம் வரை ஏராளமான முக்கிய சீர்திருத்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம். நேரடி பயன் பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகிய வழிகளில் நிலையான மற்றும் வெளிப்படைத் தன்மை வாய்ந்த ஆட்சியை நாடு ஏற்படுத்தியுள்ளது. இன்று சுமார் 300 திட்டங்களின் பணம் சார்ந்த பயன்கள், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதுவரை பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ. 27 லட்சம் கோடி,  வெளிப்படையாக செலுத்தப்பட்டுள்ளன. கொவிட் பெருந்தொற்றின் போது கோடிக்கணக்கான மக்கள் வறுமை நிலைக்கு கீழ் தள்ளப்படாததற்கு இது போன்ற திட்டங்களும் செயல்பாடுகளுமே காரணம் என்று உலக வங்கியின் அறிக்கை பாராட்டியுள்ளது.

13.   ஊழல் ஒழிக்கப்பட்டு, செலுத்தப்படும் வரியின் ஒவ்வொரு காசும் முறையாக பயன்படுத்தப்படும்போது வரி செலுத்துவோர் ஒவ்வொருவரும் பெருமை அடைகிறார்கள்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

14.   குறுக்கு வழி அரசியலை அரசுகள் தவிர்க்க வேண்டும் என்று நேர்மையாக வரி செலுத்துவோர் இன்று விரும்புகிறார்கள். சாமானிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் நிரந்தர தீர்வுகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே தற்போதைய சவால்களை எதிர்கொள்வதுடன் நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நீண்ட கால திட்டங்களிலும் எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது.

15.   ‘வறுமை ஒழிப்பு’ என்பது தற்போது வெறும் முழக்கமாக மட்டும் இருப்பதில்லை. ஏழைகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கி அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எனது அரசு பாடுபடுகிறது.

16.   உதாரணமாக, வறுமைக்கு முக்கிய காரணம், நோய். தீவிர உடல் உபாதை, ஒரு ஏழை குடும்பத்தை முற்றிலும் பாதிப்பதோடு, பல தலைமுறையினரை கடனாளிகளாக ஆக்குகிறது. இத்தகைய பிரச்சினையிலிருந்து ஏழைகளை விடுவிப்பதற்காக நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றுள்ளனர். ஏழைகள் மேலும் ஏழைகளாவதைத்  தடுத்து ரூ. 80 ஆயிரம் கோடியை அவர்கள் செலவு செய்வதை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தடுத்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 9000 மக்கள் மருந்தக மையங்களில் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் ஏழை மக்களின் ரூ. 20000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தக திட்டங்களின் வாயிலாக மட்டுமே ரூபாய் ஒரு லட்சம் கோடி அளவிலான உதவியை நாட்டு மக்கள் பெற்றுள்ளனர்.

17.   மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தண்ணீர் பற்றிய உதாரணத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ‘ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்’ வழங்குவதற்காக ‘ஜல் ஜீவன் இயக்கத்தை’ எனது அரசு தொடங்கியது. இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பு 7 தசாப்தங்களில் நாடு முழுவதும் 3.25 கோடி வீடுகளில் மட்டும் தான் தண்ணீர் இணைப்புகள் இருந்தன. எனினும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பங்களுக்கு தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தினால் ஏழை குடும்பங்கள் பெருமளவு பயனடைந்து வருவதோடு அவர்களது பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

18.   கடந்த சில ஆண்டுகளில் மூன்றரை கோடிக்கும் அதிகமான ஏழை குடும்பங்களுக்கு உறுதியான வீடுகளை அரசு கட்டித் தந்துள்ளது. வீட்டுடன், புதிய தன்னம்பிக்கை வளர்கிறது. இதன் மூலம் குடும்பத்தின் தற்போதைய நிலை மேன்மை அடைவது மட்டுமல்லாமல், அந்த வீட்டில் வளரும் குழந்தையின் தன்னம்பிக்கையும் வளர்கிறது. கழிவறை, மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி ஏழைகளின் துயரை நீக்க அரசு முயற்சித்து வருகிறது. இதன் விளைவாக அரசின் திட்டங்களும் பயன்களும் ஏழை எளியோரை சென்றடையும் என்றும், இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டிலும் 100% பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்றம் நாட்டு மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

19.   இது என்னுடையது, இது உங்களுடையது என்ற அணுகுமுறை சரியானது அல்ல என்று நமது நூல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளில் எனது அரசு எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அனைத்து பிரிவினருக்காகவும் பணியாற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் எனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் அடிப்படை வசதிகள், அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது அல்லது இலக்கை அடையும் தருவாயில் உள்ளது.

20.   அனைத்து திட்டங்களும் ஏழைகளையும் 100 சதவீத பயனாளிகளையும் சென்றடைய வேண்டும் என்பதில் எனது அரசு உறுதிப்பூண்டுள்ளது. தகுதி வாய்ந்த அனைவரும் அரசின் திட்டங்களால் பயனடைய வேண்டும், ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் திண்ணமாக உள்ளோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

21.   கொவிட் பெருந்தொற்றின் போது உலகம் முழுவதும் ஏழை மக்களின் இன்னல்களை நாம் கண்டோம். எனினும் ஏழை மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து ,உணவு இல்லாமல் ஏழைகள் வருந்தக்கூடாது என்பதை உறுதி செய்த நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தை எனது அரசு அமல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உணர்வுப்பூர்வமான மற்றும் ஏழைகளை மையமாகக் கொண்ட அரசிற்கு இது ஓர் உதாரணம். பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 3.5 லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிக்கும் உணவு தானியங்கள் முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த அமைப்புமுறை இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply