பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சியின் முன்னேற்பாடுகள் குறித்து புதுதில்லி உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஏரோ இந்தியா 2023 விமான கண்காட்சியின் முன்னேற்பாடுகள் குறித்து புதுதில்லியில்  இன்று (ஜனவரி 24, 2023) உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2023, பிப்ரவரி மாதம் 13-ந் தேதி தொடங்கி, 17-ந் தேதி வரை நடைபெறவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய 14-வது விமானக் கண்காட்சியின்  ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதித்தார். அப்போது   பேசிய அவர் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி ஒரு நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியாவின் வலிமையான உருவாக்கம் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறினார்.

பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுதளம் என்ற பொருளில் 5 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சி 35,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள  எலஹன்கா விமானப்படைத்தளத்தில் நடைபெற வுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இதுவரை 731 கண்காட்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சகர்களின் மாநாடு மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளின் கூட்டம் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

இக்கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை மற்றும் மாநில அரசு அதிகாரிகள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். முப்படைகளின் தலைமை தளபதி ஜென்ரல் அனில் சௌஹான்,  விமானப்படைத் தலைமை தளபதி ஏர்சீஃப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி, கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், ராணுவத் தலைமை தளபதி ஜென்ரல் மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே மற்றும் பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரிகள் நேரடியாக கலந்துகொண்டனர்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply