“அபுதாபி விண்வெளி நிகழ்வில்” கலந்து கொள்ளும் இந்தியக் குழுவிற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையேற்பு.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு), புவி அறிவியல் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங், ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (05-12-2022) தொடங்கும் 2 நாள் சர்வதேச “அபுதாபி விண்வெளி நிகழ்வில்” கலந்து கொள்ளும் இந்தியக் குழுவிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்

இந்த நிகழ்வின் தொடக்க விழாவில், இஸ்ரேல் அதிபர் திரு ஐசக் ஹெர்சாக் உடன் இணைந்து இந்தியாவின் சார்பில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றுகிறார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், ஐக்கிய அரபு அமீரகத்தின்  வெளியுறவுத்துறை அமைச்சர், பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்கள் துறை அமைச்சர் ஆகியோருடன் ‘விண்வெளி இராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை செயல்படுத்துவதில் வெளியுறவுக் கொள்கையின் பங்கு’ குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இருதரப்பு விண்வெளி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் நவீன  தொழில்நுட்பத்துறை அமைச்சரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி அமைப்பின் தலைவருமான திரு சாரா அல் அமிரியுடன் அமைச்சர் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுக்களை நடத்த உள்ளார்.

அபுதாபிக்கு புறப்படுவதற்கு முன் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில், இருதரப்பு விண்வெளி ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இரு தரப்பினரும் முன்னுரிமை அளித்துள்ளதால், அரேபிய தீபகற்பத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டு விண்வெளி ஒத்துழைப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ) ஐக்கிய அரபு அமீரக விண்வெளி நிறுவனமும் (யுஏஇஎஸ்ஏ) 2016 ஆம் ஆண்டில் விண்வெளியை அமைதியான நோக்கங்களுக்காக ஆய்வு செய்தல் மற்றும் பயன்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. விண்வெளியில் சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்காக சமீபத்தில்  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.யில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நானோ செயற்கைக்கோளான ‘நயிஃப்-1’ இடம்பெற்று இருந்ததை மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply