பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். 73 வயதாகும் சார்லஸ், வரும் சனிக்கிழமையன்று முறைப்படியாக இங்கிலாந்தின் அரசர் மூன்றாம் சார்லஸ் என்று அழைக்கப்படுவார்.

லண்டனில் உள்ள சென்ட் ஜேம்ஸ் அரண்மனையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1952-ஆம் ஆண்டு இதே அரண்மனையில் ராணி எலிசபெத் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் அரசி ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை மற்றும் ராணி எலிசபெத் உயிர் நீத்த இடமான பல்மோரல் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராணி எலிசபெத்தின் மறைவு தமக்கும், குடும்பத்தினருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ், ராணி எலிசபெத்தின் பதவிக்காலம் இங்கிலாந்தின் பொற்காலமாகவும், நவீன இங்கிலாந்தை உருவாக்கிய காலமாகவும் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரது மறைவால் பிரிட்டன் மக்கள் சோகத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்குகள் ஒன்பது நாட்களுக்கு பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply