பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு 4ஜி மற்றும் 5 ஜி உரிமங்கள்.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு 23.10.2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. முதலீட்டை அளிப்பதன் மூலம் 4ஜி சேவைகளுக்கான அலைக்கற்றை நிர்வாக ஒதுக்கீட்டிற்கும், மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 21.11.2020 அன்று, தில்லி, மும்பை பகுதிகளுக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்க அரசு  அனுமதி அளித்தது. மேலும், 14.06.2022 அன்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5-ஜி சேவைகளை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி உபகரணத்தின் பரிசோதனை ஏற்கனவே இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பரிசோதனை நிறைவடைந்ததும் இந்த உபகரணம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்கப்படும். அதனை நிறுவிய பின்னர், மக்கள்  பயன்பெற தொடங்குவார்கள்.

நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பு படிப்படியாக வழங்கும் பாரத் நெட் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், வடகிழக்குப் பிராந்தியம் உட்பட பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், பின்தங்கிய மாவட்டங்கள், எல்லைப்புற பகுதிகள்,  தீவுப்பகுதிகள் ஆகியவற்றில் தொலைதொடர்பு இணைப்பை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய  தொலைதொடர்பு துணை இணை அமைச்சர்  தேவுசிங் சவுகான், மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply