கந்தன் மடாலயத்தில் உள்ள புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ மற்றும் மங்கோலிய அதிபர் உக்னாகியின் குரேல்சுக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அமைச்சர் .கிரண் ரிஜுஜூ, மங்கோலிய அதிபர் உக்னாகியின் குரேல்சுக்-வுடன் இன்று கந்தன் மடாலயத்துக்கு சென்று, கபிலவஸ்து நினைவுச்சின்னங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கபிலவஸ்து நினைவுச்சின்னங்களுடன் வைக்கப்பட்டுள்ள மங்கோலியாவின் புனித புத்தர் சின்னங்களுக்கும் அவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு.கிரண் ரிஜுஜூ, மங்கோலிய அதிபர் திரு.உக்னாகியின் குரேல்சுக், மற்றும் மங்கோலியாவுக்கான இந்தியத் தூதர் திரு.மொஹிந்தர் பிரதாப் சிங், கம்பா நோமுன் கான் ஆகியோர் உடனிருந்தனர்.

கொவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தின்போது, இந்தியா பல்வேறு நாடுகளுக்கு உதவியது என்றும், மங்கோலிய மக்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு இந்தியாவும் மகிழ்ச்சி அடைவதாகவும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு.கிரண் ரிஜுஜூ தெரிவித்தார். இந்தியா, மங்கோலியாவுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் புதிய வடிவம் பெற்று வருவதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். அழகிய நாடான மங்கோலியாவுக்கு இந்தியர்கள் அதிகளவில் வருகை தர வேண்டும் என்றும், அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என விரும்புவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

புனித புத்தரின் நினைவுச்சின்னங்களை மங்கோலியாவுக்கு எடுத்து சென்றது, இந்தியாவுக்கும், மங்கோலியாவுக்கும் இடையேயுள்ள ஆன்மீகத் தொடர்பை வெளிப்படுத்துவதற்கு சான்றாகும் என்று மங்கோலிய அதிபர் திரு.உக்னாகியின் குரேல்சுக் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை எங்களுக்கு வழங்கிய முதல்நாடு இந்தியா என்றும், கொவிட் அச்சுறுத்தலின்போது விரைவாக உதவி செய்ததால், ஏராளமான மங்கோலியர்களை காப்பாற்ற முடிந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். மங்கோலியாவில் இந்தியா நிர்மாணித்து வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மங்கோலியா, இந்தியா இடையே வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளுக்கு அடையாளம் என்றும், இந்தியா மங்கோலியாவின் நெருங்கிய நட்பு நாடு என்றும், மூன்றாவது அண்டை நாடு என்றும் மங்கோலிய அதிபர் குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply