5ஜி அலைக்கற்றையின் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி!

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்காக வெற்றி பெற்ற ஏலதாரர்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான ஏலத்தை நடத்துவது குறித்த தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட முன்னோடி திட்டங்களின் வாயிலாக டிஜிட்டல் இணைப்பு என்பது அரசின் கொள்கை முயற்சிகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பிராட்பேண்ட் சேவை, குறிப்பாக செல்பேசி பிராட்பேண்ட், குடிமக்களின் அன்றாட வாழ்வோடு ஒருங்கிணைந்துள்ளது. 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு நாடு முழுவதும் 4-ஆம் தலைமுறை சேவைகள் துரிதமாக விரிவடைந்ததன் மூலம் இதற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது. 2014-ஆம் ஆண்டு 10 கோடியாக இருந்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, தற்போது 80 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை முன்முயற்சிகளால் செல்பேசி வங்கி சேவை, இணையவழிக் கல்வி, தொலை மருத்துவம் மின்னணு ரேஷன் உள்ளிட்ட சேவைகளை அந்தியோதயா குடும்பங்கள் அணுகுவதை அரசு ஊக்குவித்து வருகிறது.

4-ஆம் தலைமுறை தொழில்நுட்ப சூழலியல், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 5-ஆம் தலைமுறை சேவையை தற்போது வழிநடத்திச் செல்கிறது. இந்தியாவில் உள்ள எட்டு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள 5-ஆம் தலைமுறை சோதனைக் கருவி, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவையின் தொடக்கத்தை துரிதப்படுத்துகிறது.  செல்பேசி கருவிகள், தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு மற்றும் இந்திய குறைகடத்தி (செமி கண்டக்டர்) இயக்கத்தின் துவக்கம் முதலியவை இந்தியாவில் 5ஜி சேவைகளின் துவக்கத்திற்கு வலுவான சூழலியலை கட்டமைக்க உதவும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 5ஜி மற்றும் வரவிருக்கும் 6ஜி தொழில்நுட்பத்துறையில் இந்தியா முன்னிலை வகிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

5ஜி சேவைகள், புதிய யுக வணிகங்களை உருவாக்குவதற்கும், நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தவும், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டால் வேலை வாய்ப்பை வழங்குவதற்கும் சாத்தியம் உள்ளது.

20 ஆண்டுகாலம் வரை செல்லுபடியாகும் மொத்தம் 72097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை, 2022, ஜூலை இறுதியில் ஏலத்திற்கு விடப்படும். குறைந்த (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ்), மிதமான (3300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் அதிக (26 ஜிகா ஹெர்ட்ஸ்)  அலைவரிசைகளுக்கு ஏலம் நடைபெறும்.

தற்போதைய 4ஜி சேவைகள் மூலம் சாத்தியமானதை விட சுமார் 10 மடங்கு அதிக வேகம் மற்றும் திறன்களை வழங்கும் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு மிதமான மற்றும் அதிக அலைவரிசை அலைக்கற்றைகளை தொலைத்தொடர்பு வழங்குனர்கள் பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு துறை சீர்திருத்தங்களை தொடரும் வகையில், எளிதான வர்த்தகததை மேற்கொள்வதற்காக, வரவிருக்கும் அலைக்கற்றை ஏலத்தின் வாயிலாக வளர்ச்சிக்கான பல்வேறு சாத்தியங்களையும் அமைச்சரவை அறிவித்தது. முதன் முறையாக, வெற்றி பெறும் ஏலதாரர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அலைக்கற்றை கட்டணங்களை ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் முன்கூட்டியே செலுத்தும் வகையில், 20 சம வருடாந்திர தவணைகளில் செலுத்தலாம். இதன் மூலம் பணப் புழக்கத் தேவைகள் கணிசமாக எளிதாக்கப்படும் என்றும், இந்தத் துறையில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான செலவும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனம், சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி மற்றும் இதர துறைகளில் இயந்திரங்கள் இடையேயான தகவல் பரிமாற்றம், இணைய உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு முதலிய தொழில்துறை 4.0 செயல்பாடுகளில் புதுமைகளை ஊக்குவிக்க தனியார் இணைப்புகளை உருவாக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply