மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களின் பயனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும்!-வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்.

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களின் பயனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் . குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில்,வேலூரில் இன்று ஊரக ஊடகவியலாளர் பயிலரங்கு நடைபெற்றது.

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.

இந்தப் பயிலரங்கில் சுகாதாரத் துறை, பெண்கள், முதியோர், மாற்றுப் பாலினத்தவர் உள்ளிட்டோர் நலன் காக்கும் சமூக நலத் துறை, நிதித் துறை உள்ளிட்ட போன்ற பல்வேறு துறைகளில் மத்திய அரசு செயல் படுத்தி வரும் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கப் பட்டது; விழிப்புணர்வு பதாகைகளும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. குமாரவேல் பாண்டியன், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுகள் செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களால், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த வாழ்க்கை வசதிகளும் வாய்ப்புகளும் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து நிவர்த்தி செய்து வருகிறது என்றும்,

மக்களின் தேவைகள் அறிந்து மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதற்கு ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயனுறும் வகையில் 35 கிலோ இலவச அரிசி, பொங்கல் பரிசுத் தொகுப்பு, மாணவர்களுக்கு இலவச சீருடை, பயண அட்டை உள்பட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை ஊடகங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகங்கள் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சி தலைவர் கூறினார்.

அரசு அமைப்புகள் தங்களின் பணிகளை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் ஊடகங்கள் செயல்படுகின்றன எனப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் . எம். அண்ணாதுரை, மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவர வேண்டும் என்றார்.

பிறப்பு முதல் இறப்பு வரை குறிப்பாக, திருமண உதவித்தொகை, கருவுற்ற பெண்களுக்கு உதவி, முதியோர் நலன் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் மத்திய அரசு வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

இதுபோன்ற அரசு திட்டங்களை ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஊடகங்கள் தெரியப்படுத்த வேண்டும்.

ஊடகங்கள் நாட்டை முன்னேற்றும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் இணை இயக்குனர் திரு. நதீம் துஃபைல் விளக்கிப் பேசினார்.

இந்த பயிலரங்கத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடசியஸ், தேசிய சுகாதார இயக்கத்தின் வேலூர் மாவட்ட உதவி திட்ட மேலாளர் மரு. ராகேஷ் கருணாநிதி, சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் திருமதி. நித்யா மற்றும் சமூக நலத்துறை அதிகாரி (முதியோர் நலன் புகார் உதவி எண்) திரு. சுந்தரமூர்த்தி ஆகியோர் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. முருகேஸ்வரி, வேலூர் கள விளம்பர உதவி அலுவலர் திரு ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply