“பேனர் வைக்கும் கலாச்சாரமும்!-அதை ஒழிப்பதற்கான வழிமுறைகளும்..!”

ஆர்.எஸ்.பாரதி.

“பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள்; மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும்”!-திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை.

“பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் – கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது.

போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில் – “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்” என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் அவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது என்பதைக் கழகத்தினர் அனைவரும் அறிவீர்கள்.

அதன்பிறகு, கழகத்தினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

ஆகவே, அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று கழகத்தினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-கே.பி.சுகுமார்.

முக்கிய குறிப்பு:

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க ஒரே வழி:

பதவியில் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் மற்றும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களும் மனது வைத்தால், 24 மணி நேரத்தில் இந்த ஆபத்தான பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முழுமையாக ஒழித்து விடலாம். ஏனென்றால், இவர்களை வரவேற்று; வாழ்த்திப் பாராட்டி பேனர்கள் வைப்பதே இவர்களின் ஆதரவாளர்கள் (ஜால்ராக்கள்) தான்…!

கட்சித் தலைமையின் மேல் வைத்திருக்கும் இருக்கும் விசுவாசத்தைவிட; பிழைப்பு நடத்துவதற்காக, மேற்படி நபர்களிடம் தாம் நெருக்கமாக இருப்பதாக பொது வெளியில் (அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடம்) வெளிப்படுத்திக்கொள்வதற்காகவே; இதுபோன்ற தனி மனித துதிபாடும் பழக்கம்; அரசியலில் வழக்கமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இது முற்றிலும் கலையப்பட வேண்டும்; முளையிலேயே கருவறுக்கப்பட வேண்டும்.

ஏனென்றால், கும்பிடுகின்ற கையிலும் கூரிய வாள் இருக்கும் என்பதை அமைச்சர் பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுப்போன்ற நபர்களால்தான் ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் உண்டாகும்.

அறிவாளிகளை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்; அடிமைகளை தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; துரோகிகளை இனங்கண்டு உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்”. இல்லையென்றால், மிகப்பெரிய அவமானத்தை சந்திக்க வேண்டிவரும்.

எனவே, எதிரிகள் என்றைக்கும் எதிரிகள்தான்; ஆனால், அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அருகில் இருக்கும் உறவுகளும், நட்புகளுமே…!

மரியாதையை மனதிலும்; நன்றியை நடத்தையிலும் எவன் வெளிப்படுத்துகிறானோ; அவன்தான் உண்மையான மனிதனாகவும், தொண்டனாகவும், அமைச்சனாகவும் இருக்க முடியும்.

எனவே, பதாகைகள், சுவரொட்டிகளில் முகம்காட்டி தடம் பதிப்பதைவிட; தங்களின் நேர்மையான செயல்பாடுகளின் மூலம் மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்..!

அதனால்தான்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (௨௱௩௰௧ – 231)

வறியவர்க்கு ஈதல் வேண்டும்; அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். (௨௱௩௰௨ – 232)

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம்; வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

என்கிறார் நமது திருவள்ளுவப் பெருந்தகை.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN July 18, 2021 5:22 pm

Leave a Reply