ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல தயாராகி வரும் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர்கள்..!

ஆரோக்கிய ராஜீவ்.

தனலட்சுமி.

ரேவதி.

சுபா.

நாகநாதன்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில், தடகளப் பிரிவின் தொடர் ஓட்ட வீரர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் (ஆண்கள் 4×400 தொடர் ஓட்டம்), ரேவதி வீரமணி (கலப்பு 4×400 மீ தொடர் ஓட்டம்), தனலட்சுமி சேகர் (கலப்பு 4×400 மீ தொடர் ஓட்டம்), சுபா வெங்கடேசன் (கலப்பு 4×400மீ தொடர் ஓட்டம்), நாகநாதன் பாண்டி (ஆண்கள் 4×400 தொடர் ஓட்டம்) ஆகிய 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆரோக்கிய ராஜீவ், தனலெட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ரேவதி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகநாதன், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர்.

ஆரோக்கிய ராஜீவ்.

ராணுவ வீரரான ஆரோக்கிய ராஜீவ் லால்குடியைச் சேர்ந்தவர். அர்ஜூனா விருது பெற்ற இவர், 3 முறை ஆசியப் போட்டிகளிலும், பலமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, தற்போது 2-வது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

தனலட்சுமி.

திருச்சியை அடுத்த குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் – உஷா தம்பதியின் மகள் தனலட்சுமி. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர், 100 மீ ஓட்ட தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து, இந்தியாவின் முன்னணி வீராங்கனையான டூட்டி சந்தை முந்தினார். இதேபோல 200 மீ ஓட்டத்தில் போட்டி தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து 23 ஆண்டுகளுக்கு முன்பு பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

சுபா.

திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் பகவதிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன்- பூங்கொடி தம்பதியினரின் மகள் சுபா. சர்வதேச போட்டிகளில் 3 முறையும், தேசிய அளவிலான போட்டிகளில் 20 முறையும் வெற்றி பெற்றுள்ள இவர், முதல்முறையாக தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ரேவதி.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி – ராணி தம்பதியரின் மகள் ரேவதி. இவர் 3 வயதாக இருக்கும்போது அப்பாவும், 4 வயதில் அம்மாவும் இறந்துவிட்டனர்.

னது தாய்வழிப் பாட்டி அரவணைப்பில் வளர்ந்த இவர், 6-ம் வகுப்பு படிக்கும்போதே மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் ஷூ அணியாமல் ஓடி முதல் பரிசு பெற்றார். இவரது முயற்சி மற்றும் ஆர்வத்தை கண்டு வியந்து போன மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளப் பயிற்சியாளர் கண்ணன், இவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்து ஊக்கப்படுத்தினார். பின்னர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் இவர் வெற்றி பெற்றார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

நாகநாதன்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள சிங்கப்புலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் நாகநாதன் (25). இவர் தமிழ்நாடு சென்னை பெருநகர காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

நாகநாதன் 2018 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சென்னை காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து தடகள போட்டிகளில் உள்ள ஆர்வம் காரணமாக, நாகநாதனுக்கு சென்னை காவல்துறை உயர் அலுவலர்கள், விளையாட்டில் சாதிப்பதற்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்துள்ளனர்.

இவர் காவல்துறையில் பணிபுரிந்துகொண்டே பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று வந்தார்.

1980-க்கு பிறகு தமிழ்நாடு காவல்துறையில் இருந்து ஒலிம்பிக் தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தற்போது இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply