நான்காவது தூணின் லட்சணங்கள்…!- தவறு செய்வது பெற்றத் தாயாக இருந்தாலும் அதை தயங்காமல் சுட்டிக் காட்டுவோம்..!

எட்மண்ட் பர்க்.

அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் 12.01.1729 ஆம் ஆண்டு பிறந்து, இங்கிலாந்தில் உள்ள பியான்கான்ஸ் ஃபீல்டு என்ற இடத்தில் 09.07.1797ஆம் ஆண்டு மறைந்த எட்மண்ட் பர்க் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பிரிட்டனின் சமூக மற்றும் அரசியல் மறுமலர்ச்சிக்காக தன்னை அர்பணித்துக் கொண்டார். 18-ஆவது நூற்றாண்டின் தலைச் சிறந்த தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார். அப்போது பிரிட்டனில், பார்லிமெண்ட், நீதித்துறை, நிர்வாகம் (மந்திரி சபை) ஆகிய இம்மூன்றும் மூன்றுத் தூண்கள் என்று வர்ணிக்கப்பட்டு வந்தன. ஆனால், பத்திரிகை (ஊடகங்கள்) களை ‘நான்காவது தூண்’ என்று எட்மண்ட பர்க் கூறினார்.

இக்கருத்து, உலகம் முழுவதும் அன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த அளவிற்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக விழிப்புணர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பத்திரிகைகளின் பங்களிப்பு அன்று மகத்தானதாக இருந்து வந்தது.

ஒரு நாட்டில் பார்லிமெண்ட், நீதித்துறை, நிர்வாகம் ஆகிய மூன்றும் சீர்கெட்டு, சீரழிந்து போனாலும் கூட, பத்திரிகைகள் /ஊடகங்கள் மட்டும் பரிசுத்தமாகவும், நடுநிலையோடும், சமூக அக்கறையோடும், உண்மையாகவும், உத்தமமாகவும் தமது கடமையை செய்யுமானால், அந்நாட்டை சீரழிவிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் மிக விரைவில் மீட்டு விடலாம். அந்த வலிமை பத்திரிகையாளர்களுக்கு உண்டு என்பதை “எட்மண்ட் பர்க” உணர்ந்ததால் தான் பத்திரிகைகளை ‘நான்காவது தூண்’ என்று அவர் வர்ணித்தார்.

ஒரு நாட்டில் அனைத்து வளங்களும் அளவுக்கு அதிகமாக நிறைந்திருந்தாலும், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இவைகள் மூன்றும் இல்லை என்றால், அது நாடு என்ற அந்தஸ்த்தை பெறமுடியாது. அடிமை விலங்குகள் வாழும் காடு என்றுதான் கருதப்படும். கடந்த கால உலக வரலாற்றை நாம் உற்று நோக்கினால், பல்வேறு புரட்சிகளுக்கும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கும், பத்திரிகைகளின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வந்திருக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

ஒரு காலத்தில் அரசியல், கல்வி, மருத்துவம், இதழியல் (ஊடகவியல் -Journalism) இவைகள் அனைத்தும் சமூகப் பணியாக தான் கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று?! இவைகள் அனைத்துமே முழுக்க, முழுக்க வணிக நோக்கம் கொண்டதாக மாறிவிட்டது. வணிக நோக்கம் என்று வந்துவிட்ட பிறகு, இதில் லாபம், நஷ்டம் என்பதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?!

இந்தியாவைப் பொருத்தவரை, ஒரு கவரில் கொஞ்சம் பணமும், ஒரு பிரியாணிப் பொட்டலமும், கையில் ஒரு மதுப்பாட்டிலும் கொடுத்து விட்டால் போதும் ஒரு வாக்காளனை விலைக்கு வாங்கிவிடலாம்.

இதையே ஒரு பத்திரிகையாளனுக்கும் கொடுத்துவிட்டால், நாம் எதை எழுதச் சொல்கிறோமோ; அதைச் செய்தியாக எழுதிவிடுவான் என்ற ஒரு மோசமான, மிக கேவலமான நிலை இப்போது இங்கு உருவாகிவிட்டது. இது ஏதோ மிகைப்படுத்தி நான் சொல்வதாக யாரும் நினைக்கவேண்டாம். கவர் வாங்கிக் கொண்டு எழுதுவதுதான் “கவர் ஸ்டோரி” என்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் இன்றையப் பகிரங்க விமர்சனமாக இருக்கிறது.

விரல் விட்டு எண்ணக்கூடிய நம்மைப் போன்ற ஒரு சில பத்திரிகையாளர்கள் வேண்டுமானால், இதற்கு விதி விலக்காக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையானவர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது என்பதை வெட்கத்தோடு இங்கு ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.

புகைப் போக முடியாத இடத்தில் கூட, புகுந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு, இதுப்போன்ற விமர்சனங்கள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

அரைப் (½) பக்கம் விளம்பரம் கொடுத்தால்; அரைப் (½) பக்கம் பாராட்டிச் செய்தி வெளியிடுவார்கள். ஒரு (1) பக்கம் விளம்பரம் கொடுத்தால்; அன்று தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் புகைப்படத்துடன் இடம் பிடித்துவிடலாம் என்ற, மோசமான நிலை இங்கு உருவாகிவிட்டது. ‘ஒன்று வாங்கினால்; ஒன்று இலவசம்’ என்று கூவி விற்கும் வியாபார நிறுவனங்களுக்கும், பத்திரிகை / ஊடக நிறுவனங்களுக்கும் இதில் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை.

தமிழகத்தில் வாரம் இருமுறை வெளிவரும் ஒரு தமிழ் புலனாய்வு இதழ் பற்றி சமீபத்தில் ஒரு இணையதளத்தில் விமர்சனம் படிக்க நேர்ந்தது. அதில், ஆபாசத்தை பிரசுரம் செய்து, விற்றுப் பிழைப்பு நடத்துவதற்கு பதிலாக, விபச்சாரம் செய்து பிழைப்பது எவ்வளவோ மேல் என்று அதில் ஒருவர் ஆதங்கப்பட்டிருந்தார். ஆனால், இந்த விமர்சனம் சம்பந்தபட்டவர்களின் பார்வையில் தண்டுப்பட்டதா என்பது நமக்கு தெரியாது.

அந்த அளவிற்கு ஒரு மோசமான நோய் ஊடகத் (பத்திரிகை) துறையில் இப்போது பரவியிருக்கிறது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதைக்கிறது.

எந்தெந்தப் பத்திரிகைகள் / ஊடகங்கள், எந்தெந்த கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்பதை நாம் சொல்ல தேவையில்லை. இதை பாமர மக்கள்கூட இங்கு நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தப் (ஊடககாரன்) பத்திரிகைகாரன் இந்தக் கட்சிக்கு விசுவாசமானவன் (அல்லது) ஆதரவாளன் இவன் இப்படித்தான் எழுதுவான் என்று, பகிரங்கமாகவே மக்கள் பேசி வருகிறார்கள். பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும், தங்கள் பாணியவே மாற்றிக் கொண்டவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை; இங்கு யாரும் மறுப்பதற்கு இல்லை.

ஒரு தலைப்பட்சமாக செய்திகள் வெளியிடுவதால், நம்மைப் பற்றியும், நம் ஊடகத்தைப் பற்றியும், பத்திரிகையைப் பற்றியும் மக்கள் என்ன நினைப்பார்கள்?! உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டால், நடுநிலையாளர்கள் நம் முகத்தில் காரித் துப்பமாட்டார்களா?! என்ற கூச்சமோ, குற்ற ணர்வோ, பயமோ இல்லாமல் இவர்கள் பத்திரிகை / ஊடகம் நடத்துகிறார்கள் என்றால், மற்றவர்களை விமர்சனம் செய்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?!

ஒரு நாட்டை ஆளுகின்ற உண்மையான தலைவனுக்கு என்ன தகுதி இருக்க வேண்டுமோ; குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் உண்மையான நீதிபதிகளுக்கு என்ன தகுதி இருக்க வேண்டுமோ; ஒரு நாட்டின் நிர்வாகத்தை சிறப்பாக நடத்திச் செல்லும் உண்மையான அமைச்சர்களுக்கு என்ன தகுதி இருக்கவேண்டுமோ; அதைவிட கூடுதலான தகுதியும், தனிப்பட்ட ஒழுக்கமும், பத்திரிகையாளர்களுக்கு அவசியம் இருக்கவேண்டும்.

அப்போதுதான் பார்லிமெண்ட், நீதித்துறை, நிர்வாகம் இவற்றில் உள்ளவர்கள் நீதி தவறும் போதும்; நெறிகளுக்கு புறம்பாகச் செயல்படும் போதும்; அதை தட்டிக் கேட்கவும், சுட்டிக்காட்டவும் ஒரு ஊடக / பத்திரிகையாளனால் முடியும்.

அரசியல், அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், கலை, கல்வி, சமூகம், மருத்துவம்… இப்படி அனைத்துத் துறைகளைப் பற்றியும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளைப் பற்றியும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் மற்றும் விமர்சிப்பதற்கும் எந்த அளவிற்கு ஒரு பத்திரிகையாளனுக்கு உரிமையும், சுதந்திரமும் இருக்கிறதோ, அதுபோல அவன் எழுத்துக்களையும், கருத்துக்களையும், படைப்புக்களையும், விமர்சனம் செய்வதற்கு உலகில் உள்ள அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதை பத்திரிகையாளன் நன்கு உணரவேண்டும்.

ஒரு பத்திரிகையாளன், அனைத்தையும் கேட்கவேண்டும் என்ற ஆர்வமுடையவனாகவும் (விருப்பம்), கேட்கக்கூடியவனாகவும், கேட்டதை உள்வாங்கிக் கொள்பவனாகவும் (கிரகித்தல்), கேட்டதை மறந்துபோகாமல் இருக்கக் கூடியவனாகவும், அப்படி மறவாது மனதில் பதிந்துள்ள அந்த விஷயங்களை உண்மையானதா? பொய்யானதா? சாத்தியமாகக் கூடியதா? சாத்தியமாகாததா? என்று பகுத்தறியும் ஞானம் உள்ளவனாகவும் இருக்கவேண்டும்.

நேரடியாக வார்த்தைகளால் சொல்லாதவற்றையும், ஊகித்து தெரிந்துக் கொள்ளும் அறிவுடையவனாகவும், உண்மையில்லாத விஷயங்களை விட்டு விடுபவனாகவும், உண்மை நிலையை அறிவதை விடா முயற்சி கொண்டவனாகவும், உயிர் போகின்ற நிலையிலும் உண்மையை மட்டுமே எழுதவும், பேசவும் கூடியவனாகவும், தவறு செய்வது பெற்றத் தாயாக இருந்தாலும் அதை தயங்காமல் சுட்டிக் காட்டக் கூடியவனாகவும், தனித்தன்மை உள்ளவனாகவும், தனிப்பட்ட ஒழுக்கம் உடையவனாகவும், நடுநிலையானவனாகவும், சாதி, மத, இனம், நிறம், மொழி, பாகுபாடு அற்றவனாகவும், இதயம் பரிசுத்தமாகவும், எண்ணங்கள் தூய்மையானதாகவும், வார்த்தைகள் உண்மையாகவும், செயல்கள் சுய நலமற்றதாகவும் இருப்பவன்தான் உண்மையான பத்திரிகையாளன்.

இதுப்போன்ற உண்மையான பத்திரிகையாளர்களையும், அவர்களின் படைப்புக்களையும் உலகம் உயிராக மதிக்கும். அந்த வகையில் நமது “உள்ளாட்சித்தகவல்” லட்சியப் பயணமும் இருக்கும்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply