பொள்ளாச்சி பாலியல் வழக்கு!-சிபிஐ அதிகாரிகளின் பிடியில் சிக்கிய அதிமுக நிர்வாகி அருளானந்தம்!

அதிமுக நிர்வாகி அருளானந்தம்.

கோயம்புத்தூர் அருகே, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோரை கடந்த 2019-ம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் முதலில் கைது செய்தனர்.

பாலியல் துன்புறுத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கார்.

‘பார்’ நாகராஜ்.

இதற்கிடையே, பாலியல் வழக்கு தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக, அதிமுகவை சேர்ந்த ‘பார்’ நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் தனியாக கைது செய்யப்பட்டனர்.

மேற்கண்ட இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே வழக்கின் தன்மை கருதி, மேற்கண்ட இரண்டு வழக்குகளும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

RC0582019S0002

மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ புலனாய்வு பிரிவினர் புதியதாக வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து சிபிஐ ஐஜி மற்றும் கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேற்கண்ட 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தாங்கள் பதிவு செய்த வழக்கு தொடர்பாக மீண்டும் அப்போது கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர். தவிர, இந்த வழக்கு தொடர்பான முதல்கட்ட குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதேசமயம், மேற்கண்ட வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா?! என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட பாலியல் வழக்கு தொடர்பாக, பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகேயுள்ள சங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), பொள்ளாச்சி வடுகபாளையத்தில் உள்ள விகேவி லேஅவுட்டைச் சேர்ந்த பாபு என்ற ‘பைக்’ பாபு (27), பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரை சிபிஐ அதிகாரிகள் 05.01.2021 மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பாலியல் வழக்கு, அது தொடர்பான அடிதடி வழக்கு உள்ளிட்டவை குறித்து அவரிடம் விசாரித்தனர். அதன் இறுதியில் மேற்கண்ட மூவரையும் சிபிஐ அதிகாரிகள் 05.01.2021 நள்ளிரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளதோடு, கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். ‘பைக்’ பாபு இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசராணைக்குப் பின்னர், இன்று ( 06.01.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிமுக நிர்வாகி அருளானந்தம்.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் அதிமுக கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட அருளானந்தம், ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது ஆளும் கட்சியான அதிமுக தலைமைக்கு மிகப் பெரிய அவமானத்தையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், இவ்வழக்கில் அடுத்துக் கட்ட நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

எனவே, இவ்வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply