தனி இட ஒதுக்கீடு விவகாரம்!-மாடு மேய்க்கும் சிறுவனுக்கு புரிந்த தத்துவம்; தமிழகத்தை ஆண்டவர்களுக்கு புரியவில்லை!-பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆதங்கம்.

தமிழ்நாட்டில் 1980-களில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த நேரம் அது.
ஒரு நாள் ஓர் இடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பாட்டாளி சிறுவன் ஒருவனை அழைத்து வன்னியர் சங்கம் முன்வைக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை புரிகிறதா? என்று கேட்டேன். அந்த சிறுவனும் ‘‘எனக்கு மிகவும் நன்றாக புரிகிறது அய்யா’’ என்று கூறினான்.

அவனுக்கு 14, 15 வயது தான் இருக்கும். ஆனால், அவனது பேச்சும், செய்கையும் பெரிய மனிதத் தோரணையில் இருந்தன. இந்த சிறுவனுக்கு இட ஒதுக்கீடு குறித்து தெரியுமா? என்று நினைத்துக் கொண்டே, அதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக சொல் என்று அச்சிறுவனுக்கு கட்டளையிட்டேன்.
அதைக் கேட்ட அந்த சிறுவன் அளித்த எளிமையான விளக்கம் மெய்சிலிர்க்க வைத்தது.

‘‘அய்யா…. அது ஒன்றுமில்லை அய்யா. இருக்கும் இட ஒதுக்கீட்டை அனைவருக்கும் அவர்கள் மக்கள்தொகைக்கு இணையாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது தான் நீங்கள் வலியுறுத்தும் இட ஒதுக்கீடு ஆகும். இப்போது இருக்கும் இட ஒதுக்கீடு அப்படி அல்ல. உதாரணமாக, ஒரு தேங்காயை சூரைத் தேங்காய் உடைப்பது போல உடைத்தால் அதை எடுப்பதில் அங்குள்ளவர்களிடம் மோதல் நடக்கும். அதில் ஒருவருக்கு அரை மூடி தேங்காய் கிடைக்கும், இன்னொருவருக்கு கால் மூடி தேங்காய் கிடைக்கும். வேறு சிலருக்கு வெறும் ஓடு தான் கிடைக்கும். இப்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் வன்னியர் சமுதாய மக்களுக்கு வெறும் ஓடுகள் மட்டும் தான் கிடைக்கின்றன.

இது நியாயமானதல்ல.மாறாக, ஓர் இடத்தில் 100 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவர்களுக்கு வழங்க வேண்டிய தேங்காயை 100 கீற்றுகளாக வெட்டி, அனைவரையும் வரிசையில் வர வைத்து ஒருவருக்கு ஒரு கீற்று தேங்காயை வழங்கினால், அனைவருக்கும் சமமாக கிடைக்கும். அதைப் பெற்றுக் கொள்வதில் சமுதாயங்களிடையே மோதல்களும் ஏற்படாது.

இது தான் அய்யா வலியுறுத்தும் இட ஒதுக்கீடு’’ என்றான் அந்த சிறுவன். அதைக் கேட்டு நான் அசந்து விட்டேன். பாட்டாளி வகுப்பைச் சேர்ந்த சாதாரண மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், நாம் வலியுறுத்தும் இட ஒதுக்கீடு குறித்து இந்த அளவுக்கு தெளிவாக புரிந்து வைத்துள்ளானே? என்று நினைத்து வியந்தேன். அப்போது அந்த சிறுவன் கூறிய இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் இப்போது போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

30 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மாடு மேய்க்கும் சிறுவனுக்கு நமது இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றி நன்றாக புரிந்திருந்தது. ஆனால், தமிழ்நாட்டை இதுவரை ஆண்டவர்களுக்கு இந்த சமூகநீதிக் கொள்கை புரியாதது தான் சோகம்!

எஸ்.திவ்யா.

Leave a Reply