ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திருவனந்தபுரத்திற்கு உருளை குழாய் வடிவில் வந்த 30 கிலோ தங்கம்!-ஆட்டம் காணும் கேரள ஆட்சியாளர்கள்…!-சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம்.

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, கடந்த (03.07.2020) வெள்ளிக்கிழமை அன்று ஒரு இரகசிய தகவல் வருகிறது. அதாவது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் ஒரு சரக்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகிறது என்ற தகவல் தான் அது. இரகசிய தகவல் கிடைத்தவுடன், சுங்கத்துறை அதிகாரிகள் உஷார் ஆனார்கள்.

சுங்க தடுப்பு விதிமுறைகளின்படி, ஒரு நாட்டின் தூதரகத்தில் இருந்து வரும் பார்சலை (அல்லது) பொருட்களை தடுத்து வைக்கவோ (அல்லது) திறக்கவோ சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதால், இத்தகவலை தலைமைக்கு தெரிவித்து விட்டு, இந்த பார்சலை வாங்குவதற்கு யார் வருகிறார்கள்? என்பதை கவனமாக கண்காணித்து வந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து, திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரக முகவரிக்கு வந்த பார்சலைப் பெறுவதற்காக, போலி அடையாள அட்டையுடன் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தபோது ரித் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரை வரவழைத்து அவர் முன்பாக அந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அதில் உருளை குழாய் வடிவில் 30 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

இந்த ஸரித் என்பவருக்கும், கேரள தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண்ணுக்கும், இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ளவர்களுடன் ஸ்வப்னா சுரேஷ் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அருகில் இருப்பவர்தான் ஸ்வப்னா சுரேஷ். (File Photos)

மேலும், ஸ்வப்னா சுரேஷ் இதற்கு முன்பு அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

தங்க கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கு கேரள தகவல் தொடர்பு துறையில் வேலை கிடைத்தது எப்படி? என்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான், கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர், ஸ்வப்னா சுரேஷை தகவல் தொடர்புத் துறையில் பணியமர்த்தியதும் இவர்தான். அந்த வகையில் இந்த சட்ட விரோத நடவடிக்கையில் இருந்து ஸ்வப்னா சுரேஷை காப்பாற்றுவதற்கு சிவசங்கர் முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம்.சிவசங்கரின் பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக மீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா.

இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவம் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோதிக்கு, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், கேரள முதல்வர் அலுவலகத்தில் கிரிமினல் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது கேரள ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.

Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com

Leave a Reply