“கொரோனா வைரஸ்” குறித்த விழிப்புணர்வு!-களமிறங்க தயாராகி வரும் காவலர்கள் குழு.

உலகம் முழுவதும் “கொரோனா வைரஸ்” (COVID-19 கொவிட்-19) பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் உண்மை நிலமையை விரிவாக எடுத்துரைத்து பதட்டத்தை தணிப்பதற்காகவும், “கொரோனா வைரஸ்” பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையில், ஒரு காவலர்கள் குழு களமிறங்க தயாராகி வருகிறது.

அதற்காக வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் சுகந்த பிரியன் இன்று மாலை (மார்ச் 15) வையம்பட்டி காவல்நிலையத்திற்கு நேரில் வந்து, காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான காவல் துறையினருக்கு “கொரோனா வைரஸ்” பாதிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

நாளை முதல் காவல் பணியோடு சேர்த்து, “கொரோனா வைரஸ்” குறித்த விழிப்புணர்வு பணியிலும் காவல்துறையினர் ஈடுப்பட உள்ளனர்.

இதைபோன்று நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துறைச்சார்ந்த அதிகாரிகளும் “கொரோனா வைரஸ்” குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க முன் வந்தால், ஒரே நாளில் மக்கள் விழிப்படைவதோடு, நிம்மதியாகவும் இருப்பார்கள்.

-துரைதிரவியம்.

Leave a Reply