பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்!

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 172 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியரும் இப்பள்ளிக்கு இல்லை என்பதால், மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடிப்படை வசதிகளான குடிநீர், தூய்மையான கழிவறையும் இல்லை. இதனால் இந்த  குறைகளை சரி செய்யக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, பெற்றோர்களுடன் பள்ளிக்கு பூட்டு போட்டு பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வாணியம்பாடி வருவாய் ஆய்வாளர் ஆகியோர், பேச்சு வார்த்தை நடத்தி குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

                    மு.ராமராஜ்.

Leave a Reply