கஜா புயலின் போது ஆட்டோ மீது மரம் விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் ஆறுதல்!

கஜா புயலின் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாமல், திருச்சி மாவட்டமும் பாதிக்கப்பட்டது. 4 நாட்கள் ஆகியும் திருவெறும்பூர் பகுதிகளான அண்ணாநகர், காந்தலூர், இலந்தைப்பட்டி, அசூர், தெற்கு தேனீர்பட்டி, பெரிய சூரியூர், சின்ன சூரியூர் பகுதிகளில் இன்னும் முழுமையாக மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை.

இந்நிலையில், புயலால் சேதமடைந்தப் பகுதிகளை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் இன்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கினார்.

மேலும், கஜா புயலின் போது துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் சவாரிக்கு சென்ற ஆட்டோ மீது மரம் விழுந்து உயிரிழந்த நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த துரைசாமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் முறிந்த விழுந்த மின் கம்பங்களையும், அங்கு வேலை செய்யும் மின்சார ஊழியர்களையும் சந்தித்து பேசியதோடு, விரைந்து மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

பின்னர் இலந்தப்பட்டி, காந்தலூர் பகுதியில் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2,500-ம், அசூர் தெற்கு தேனீர்ப்பட்டியில் மரம் விழுந்து இறந்த மாட்டின் உரிமையாளர் சிவக்குமாருக்கு ரூ.2,500 -ம்,  வழங்கினார்.

இலத்தப்பட்டி, காந்தலூர், அசூர், தேனீர்ப் பட்டியில் முறிந்து விழுந்த மின் கம்பங்களை பார்வையிட்டார். 4 வது நாளாக மின்சாரம் இல்லாத நவல்பட்டு அண்ணாநகர், காந்தலூர், இலத்தைப் பட்டி, அசூர், தெற்குதேனீர் பட்டி, பெரிய சூரியூர், சின்ன சூரியூர் பகுதிக்கு விரைந்து மின்சார வசதி செய்து கொடுக்க மின்சார வாரிய அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

சின்ன சூரியூர் பகுதி பொது மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் தனது சொந்த செலவில் ஜெனேரேட்டர் கொண்டு போர்வெல் மின்சார மோட்டர் இயக்க செய்ததை நேரில் பார்வையிட்டார்.

மேலும், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் திருவெறும்பூர் பகுதி மக்கள் சார்பில். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply