திருந்திய நெல் சாகுபடி நடவு வயல்களை, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி பார்வையிட்டார்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், குவளக்குடி, கீழமுல்லைக்குடி மற்றும் வேங்கூர் ஊராட்சிப் பகுதிகளில், வேளாண் துறை மூலம் நடவு செய்துள்ள திருந்திய நெல் சாகுபடி விவசாய நிலங்களை, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி இன்று நேரில் பார்வையிட்டார்.

மேலும், நடவு பயிர்களை களை நீக்குவதற்கு கோணவிடார் கருவி மூலம் நடக்கும் பணியை பார்வையிட்டதோடு, நடவு நெற்பயிர்களை பூச்சிகள் தாக்குவதில் இருந்து தடுப்பதற்கு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை என்ற பெயரில் வயல் வரப்புகளில் உளுந்து, எள், தட்டப்பயிர், சூரியகாந்தி, செவந்தி பூ செடி ஆகியவற்றை நடவு செய்ய வேண்டும் என்று வேளாண் அலுவலர்கள் கூறினார்கள். அதன்படி சூரிய காந்தி செடிகளை வரப்பில் நடவு செய்தனர்.

அப்போது குவளை வடிகால் வாய்க்கால் தூர்வார வேண்டும், பழுதடைந்துள்ள துணை சுகாதார மையம் புதுப்பித்து தரவேண்டும், மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட காவிரி ஆற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணியிடம் தெரிவித்தனர்.

அப்போது திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ், மற்றும் வேளாண் அலுவலர்கள் ராஜேஷ்வரன், பெரியகருப்பன், உழவர் பயிற்சி நிலைய ரவி, திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

இத்திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு 3 கிலோ உளுந்து விதை 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.

தமிழக வேளாண்துறை பரிந்துரைபடி விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி செய்தால், நாற்று விடும் செலவு குறைவு, களையெடுப்பது எளிது, பூச்சி தாக்குவது மற்றும் எலி தொல்லைகள் இருந்து காப்பாற்றுவது எளிது. மேலும், இயந்திரம் மூலம் நடவு செய்பவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply