ஹெச்.டி.குமார ஸ்வாமியின் குடுமி காங்கிரஸ் கையில் பலமாக சிக்கியுள்ளது!

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு, கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதள கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. மே 23 கர்நாடகா முதலமைச்சராக ஹெச்.டி.குமாரஸ்வாமி  பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், டில்லி சென்றுள்ள ஹெச்.டி.குமாரஸ்வாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். பின்னர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் ஹெச்.டி.குமாரஸ்வாமி சந்தித்து பேசியுள்ளார்.

பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஹெச்.டி.குமாரஸ்வாமி.

78 இடங்களில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 37 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்ற மத சார்பற்ற ஜனதள கட்சிக்கு முதலமைச்சர் பதவியையும், ஆட்சி அமைக்கவும் ஆதரவளித்துள்ளது. ஆனால், 104 இடங்களில் வெற்றிப் பெற்ற பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை நிரூப்பிக்க முடியாமல் எதிர் கட்சி வரிசையில் அமர இருக்கிறது.

இதன் மூலம் ஹெச்.டி.குமாரஸ்வாமியின் குடுமி தற்போது காங்கிரஸ் கையில் பலமாக சிக்கியுள்ளது. திரை மறைவில் காங்கிரஸ் தலைமை உண்மை முதலமைச்சராகவும், ஹெச்.டி.குமாரஸ்வாமி பொம்மை முதலமைச்சராகவும், கர்நாடகா மாநிலத்தில் இருப்பார்கள்” என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

உண்மையாலுமே கர்நாடகா மக்கள் மீதும், மாநிலத்தின் மீதும் ஹெச்.டி.குமாரஸ்வாமிக்கு அக்கறை இருக்குமேயானால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்து விட்டு, அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து இருந்திருந்தால், ஹெச்.டி.குமாரஸ்வாமியின் அரசியல் செல்வாக்கு இன்று பல மடங்கு உயர்ந்து இருக்கும். ஏனென்றால், “சிங்கத்தின் வாலாக இருப்பதை விட, எறும்புக்கு தலையாக இருப்பது எவ்வளவோ மேல்”

ஆனால், காங்கிரஸ் கட்சியின் கருணையால் தற்போது முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் ஹெச்.டி.குமாரஸ்வாமி, பல்வேறு சங்கடங்களையும், பல சவால்களையும் தினந்தோறும் சந்திக்க வேண்டிவரும்.

தூக்கத்தில் கூட விடிந்தால் தான்தான் முதலமைச்சரா? என்று தினந்தோறும் கிள்ளி பார்த்துக்கொள்ளும் நிலமை ஹெச்.டி.குமாரஸ்வாமிக்கு நிச்சயம் உருவாகும்.

ஏனென்றால், கடலில் விழுந்தால் கூட கரைச்சேர்ந்து விடலாம், ஆனால், காங்கிரஸ் கட்சியை நம்பி ஆட்சி அமைத்தவர்கள் யாரும் இதுவரை கரைச்சேர்ந்ததாக வரலாறு இல்லை.

ஒரு எறும்பானது தேன் பாட்டில் ஓரத்தில் இருக்கும் தேனை ருசிக்க நினைப்பது ஆசை; அது உயிர் வாழ்வதற்கான ஜீவ ஆகாரம். ஆனால், அதே எறும்பு தேன் பாட்டில் உள்ளேயே குதித்து, குளித்து தேனை குடித்துவிட முயற்சிப்பது பேராசை; ஆம், பேராசை பெரும் நஷ்டத்தை உருவாக்கும் என்பதை ஹெச்.டி.குமாரஸ்வாமி உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply