சாலை அமைக்கும் பணிக்காக பாறைகளை வெடி வைத்து தகர்த்ததால் பள்ளி கட்டிடம் விரிசல்!

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்திற்குட்பட்ட புளியங்கடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இங்கு 14 மாணவர்கள், 9 மாணவிகள் என மொத்தம் 23 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர், ஒரு உதவி ஆசிரியர் உள்ளனர்.

இந்த பள்ளி கட்டிடம் சற்று பழைய கட்டிடம். இந்த பள்ளி அருகில் சாலை அமைக்கும் பணிக்காக, ஒப்பந்ததாரர், அங்கிருந்த பாறைகளை வெடி வெடித்து தகர்த்துள்ளார். இதனால் இந்த பள்ளி கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் தனது உறுதி தன்மையை இழந்துவிட்டது.

இதனால் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒரே அறையில் இருந்து கல்வி பயில்கின்றனர். மேலும், கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் தினசரி பள்ளி வந்து செல்கின்றனர்.

எனவே, சம்மந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியை நேரில் ஆய்வு செய்து, இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், இந்த கட்டிட பாதிப்புக்கு காரணமான சாலை ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நவீன் குமார்.

Leave a Reply