நீர் நிலை ஆக்கரமிப்புகளை அகற்றாவிட்டால், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்!

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கிடு, கிடுவென குறைந்து வருவதால், குடிநீருக்காக மக்களும், நீர்நிலைகள் வறண்டதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், நன்னிலம், கொரடாச்சேரி, கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 430 ஊராட்சிகள் உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் வெட்டாறு, வெண்ணாறு, சோழசூடாமணியாறு, புத்தாறு…. போன்ற ஆறுகளில் முன்பெல்லாம் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால்  இதற்கு  உட்பட்ட  கிளை வாய்க்கால்கள் மூலம் ஆயிரக்கணக்கான குளங்களில்  தண்ணீர் நிரம்பி வழிந்தது.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் மேட்டூரில் இருந்து தண்ணீர் வராததால், அனைத்து ஆறுகளும், கிளை வாய்க்கால்களும் வறண்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக குளங்களும் வறண்டது.

ஆற்றில் தண்ணீர் வராவிட்டாலும், பருவமழை பொய்த்தாலும், எங்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் கைகொடுத்தது குளங்கள்தான். ஆனால் தற்போது, பல்வேறு குளங்கள் ஆக்ரமிப்பு காரணமாக வரும் காலங்களில் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும் அபாயம் உள்ளது. பல குளங்கள் தூர்வாரவில்லை. பல குளங்கள் பெயரளவுக்கு தூர்வாரியுள்ளனர். இதன் காரணமாக தண்ணீரை குளங்களில் தேக்கி வைக்க முடியவில்லை.

எங்கு போர்வெல் போட்டாலும், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், தண்ணீர் கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ளது.

அதிகளவில் நீர் கிடைக்கும் இடங்களில் நெல், கரும்பு, வாழை பயிரிட்டோம். தற்போது மானாவாரி பயிர் கூட செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

உடனடியாக நீர்வழித்தடங்களையும், குளங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இருக்கும் குளங்களையாவது காப்பாற்றி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியும் என்கின்றனர், திருவாரூர் பாசன விவசாயிகள்.

எனவே, நீர் நிலை ஆக்கரமிப்புகளை அகற்ற  தமிழக  அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க  வேண்டும். இல்லையென்றால், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

-க.குமரன்.

 

Leave a Reply