திருச்சி தேசிய கல்லூரி எதிரில் வேகத்தடை இல்லாதக் காரணத்தால் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்..!

 

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், பொன்னகர் அருகில் தேசிய கல்லூரி (National College) இருக்கிறது. இக்கல்லூரிக்கு எதிரில் வேகத்தடை இல்லாதக்காரணத்தால் அடிக்கடி  விபத்துக்கள் நடக்கிறது.

இக்கல்லூரிக்கு எதிரில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெள்ளை கலர் பெயிண்டால் வேகத்தடைக்கான அடையாள குறியை வரைந்திருந்தாலும், அதை இலகு இரக மற்றும் கன இரக வாகனங்கள் புழு, பூச்சாகக் கூட மதிப்பதில்லை. இதனால் இக்கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த இடத்தில்  சாலையைக் கடப்பதற்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

மேலும், சாலையின் இருபுறமும் இரவு, பகல் எந்நேரமும் வாகனங்கள் வந்த வண்ணம் இருப்பதால், இந்த இடத்தில்  சாலையைக் கடப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

இந்நிலையில், இன்று (18.02.2018) மதியம் 1.15 மணிக்கு, இந்த இடத்தில் சாலையை கடப்பதற்கு முயற்சித்த மோட்டார் சைக்கிள் மீது, அதிவேகமாக வந்த மோட்டார் பைக் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர்கள் நிலைக்குலைந்து சாலையில் விழுந்தார்கள். மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் ஏற்பட்டது. அதிஷ்டவசமாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். கொஞ்சம் தாமதித்து இருந்தால், பின்னால் வந்த கார் அவர்களை சின்னாப் பின்னாமாக்கி இருக்கும்.

எனவே, திருச்சி தேசிய கல்லூரிக்கு எதிரில் வேகத்தடை அமைத்தால் நிச்சயம் விபத்துக்களை தடுக்க முடியும்.

மேலும், கூப்பிடுகிற தூரத்தில்தான் (3 வது மெயின் ரோடு, பொன்ன நகர்) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் அலுவலகம் உள்ளது. ஆனால், இதுக்குறித்து எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

அதேபோல், மேற்காணும் அலுவலகத்திற்கு செல்ல வசதியாக தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த வழி மிகவும் ஆபத்தான வழி, எந்த நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த வழியை மூடிவிடுவதுதான், போக்குவரத்திற்கும் நல்லது, பொது மக்களுக்கும் பாதுகாப்பானது.

எனவே, சம்மந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

படங்கள்: -ரா.ரிச்சி ரோஸ்வா. 

 

 

Leave a Reply