போக்குவரத்து நெருசலில் சிக்கித்தவிக்கும் நாச்சியார்கோவில் மக்கள்!

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் சென்று நன்னிலம், நாகப்பட்டினம் செல்ல ஒரு வழியும், மற்றொரு வழியாக கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் சென்று குடவாசல், திருவாரூர் சென்று நாகப்பட்டினம் செல்ல இருவழி உள்ளது. இந்த இருவழிகளுக்கும் முக்கியப் பகுதியாக விளங்குவது நாச்சியார்கோவில் பகுதியாகும்.

இவ்வழியே நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருவதால் நாச்சியார்கோவில் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நாச்சியார்கோவில் பகுதியைச் சேர்ந்த வர்த்தக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் போலீஸாருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பிரச்னை குறித்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தும் பயனில்லை.

நாச்சியார்கோவில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால், ஆகாச மாரியம்மன் கோவில் வழி கும்பகோணத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் சென்று குடவாசல் நோக்கித் திரும்பிச் செல்லவும், அதே போல், குடவாசல் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பிரசித்திப்பெற்ற பெருமாள் கோவில் பகுதியில் இருந்து நேராக செல்ல வேண்டும் என்று ஒரு வழிப்பாதையாக போலீஸார் மாற்றினர்.

இருப்பினும், நாச்சியார் கோவிலைச் சுற்றி நூற்றுக்கணக்கான கடைகள் சாலையை ஆக்கிரமித்து இருப்பதால், வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல முடியாமல் நாள்தோறும் நேருக்கு நேர் முட்டி மோதிக் கொள்ளும் அபாயத்தில் உள்ளன.

உடனடியாக நாச்சியார் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவடன் ஒரு வழிப்பாதையை வாகனங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். அப்போது தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும், விபத்துகளையும் தடுக்க முடியும்.

-க.குமரன்.

Leave a Reply