தை பிறந்தால் வழிப் பிறக்கும் -ஆனால் விழித் திறக்குமா?- நரி குறவ இனமக்களின் பொங்கல் கொண்டாட்டங்கள்…!

DSC00377 DSC00376DSC00352DSC00371 DSC00368DSC00343 DSC00373DSC00335 DSC00321 DSC00312

வசதிப்படைத்தவர்கள் பண்டிகை மற்றும் பாரம்பரிய விழாக்களை கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுபோன்றக் கொண்டாட்டங்களைச் செய்திகளாக பதிவு செய்வதற்கும், அரங்கேற்றுவதற்கு ஆயிரமாயிரம் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் நம் நாட்டில் உள்ளன. அதே மாதிரியான நிகழ்வுகளை நோக்கி நாமும் நகர்வது முறையல்ல.

அடுத்த வேளை உணவுக்காக அல்லல்படும், அப்பாவி மக்களின் எதார்த்தங்களை எடுத்துரைப்பதும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் எளிமையான கொண்டாட்டங்களை, வெகுஜன மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வதும்தான் நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் உண்மையான நோக்கம்!- என்று, நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் ஆசிரியர் Dr. துரைபெஞ்சமின் அவர்களின் அறிவுறுத்தலின் விளைவாக,

பூர்வீகமான மற்றும் நிரந்தரமான வசிப்பிடங்களை விட்டு விட்டு, தங்களின் வயிற்று பிழைப்பிற்காகவும், தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், நாடு முழுவதும் நாடோடிகளாய் சுற்றித்திரியும் நரி குறவ இனமக்கள், இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுகிறார்கள்? என்பதை அறிவதற்காக, திருச்சி, துவாக்குடி அருகில் உள்ள தேவராய நேரிக்கு இன்று அதிகாலை புறப்பட்டு சென்றோம்.  

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நரி குறவ இனமக்கள் பூர்வீக மற்றும் நிரந்தரமான வீடுகளுக்கு திரும்பி இருப்பார்களா? என்ற சந்தேகத்தோடு, அதே சமயம் எந்தவித முன் அறிவிப்புமின்றி தேவராய நேரி கிராமத்திற்குள் நுளைந்தோம்.

என்ன ஆச்சர்யம்! அனைத்து வீடுகளிலும் பொங்கல் வைப்பதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். இது உண்மையிலுமே நமக்கு ஆச்சர்யமாக இருந்தது.

சாதி, மத, இன, மொழி, பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் ஆர்வமுடன் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை எது என்றால், அது பொங்கல் தான்.

வழக்கமாக கிராமங்களில் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை அன்று, புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில் கோலமிட்டு, செங்கரும்பு நிறுத்தி, அடுப்புக்கட்டி புது மண் பானையில் பொங்கல் வைப்பது வழக்கம்.

நரி குறவ இனமக்களும் அத்தகைய பாரம்பரியத்தோடு தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மிகவும் எளிமையான முறையில், புது மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை  மகிழ்ச்சியோடு மிகச்சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

நரி குறவ இனமக்கள் வயிற்று பிழைப்பிற்காக நாடு முழுவதும் நாடோடிகளாய் சுற்றித்திரிந்தாலும், தங்களின் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் அவர்கள் என்றைக்குமே விட்டுக்கொடுத்ததில்லை. நரி குறவ இனமக்களை பெரும்பாலும் சிறைச் சாலைகளில் கைதியாகவும், மருத்துவ மனைகளில் நோயாளியாகவும் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் ஒழுக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கும், கடைப்பிடிப்பதற்கும் நிறைய இருக்கிறது. நரி குறவ இனமக்களும் நம் மக்கள்தான்; அவர்களை நம் சகோதர, சகோதிரிகளாய் நேசிப்போம்.

தை பிறந்தால் வழிப் பிறக்கும் -ஆனால், விழித் திறக்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

-ச.ராஜா.

 

 

 

Leave a Reply