மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை பொது மக்களுக்கு இலவசமாக பழுது பார்த்து கொடுக்குமாறு மோட்டார் வாகன கம்பெனி உரிமையாளர்களை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி இன்று பல்வேறு பகுதிகளில் உள்ள ஷோரூம்களில் இலவச சிறப்பு முகாம்கள் தொடங்கியது. இந்த முகாம் வருகிற 21–ந்தேதி நடைபெறும்.
சென்னையில் யமஹா, ராயல் என்பீல்டு, பஜாஜ், டி.வி.எஸ். ஆகிய நிறுவனங்கள் 106 இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களுக்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான இரு சக்கர வாகனங்களை பொதுமக்கள் பழுது பார்க்க கொண்டு வந்திருந்தனர்.
சிறப்பு முகாமில் பழுது பார்ப்பதற்கான சேவை கட்டணங்கள், ஆயில், பில்டர் மாற்றுவது ஆகியவை இலவசமாக செய்து கொடுக்கப்பட்டன. பழுது பார்ப்பதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.
சென்னையில் நடைபெற்று வரும் முகாமை தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பி.தங்கமணி நேரில் சென்று பார்வையிட்டார்.
-கே.பி.சுகுமார்.
