ஏற்காடு மலைப்பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட மண்சரிவை 8 ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி நெடுஞ்சாலை துறையினர் போராடி சரிசெய்தனர்.
சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் கொண்டலாம்பட்டி மற்றும் குப்பனூர் ஆகிய இரு பாதைகளிலும் கடந்த திங்கள் இரவு 12 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்தது.
இதனால் ஏற்காட்டிற்கு செல்லும் மின்சாரமும் பாதிக்கப்பட்டது. ஏற்காடு தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டது.
செவ்வாய் அன்று ஏற்காட்டில் இருந்து நாகலூர் செல்லும் பாதையில் உள்ள மரப்பாலம் வழியாக ஆற்றை கடக்க முயன்ற மணிவாசகம் என்பவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியானர். மஞ்சக்குட்டை கிராமம் முருகேசன் மற்றும் காக்கம்பாடி ஆகியோரின் வீடுகள் மீது மரங்கள் விழுந்து இடிந்தன.
ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட சாலை பாதிப்புகளை சேலம் கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நெடுஞ்சாலை துறையை சேர்ந்த ஊழியர்கள், கடந்த இரு தினங்களாக சரி செய்து வருகின்றனர்.
தற்போது பைக் மற்றும் கார்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் 8 ஜே.சி.பி. வாகனங்களும், 5 லாரிகளும் பயன்படுத்தப்பட்டது.
ஏற்காட்டிற்கு வரும் மின்பாதையை சீரமைக்க சேலம் மின்வாரியத்தில் இருந்து 30 ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு ஏற்காடு ஊழியர்களுடன் இணைந்து மின்பாதையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
ஏற்காட்டை சுற்றி பார்க்க ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகளும், ஏற்காட்டிலேயே தங்கியிருந்தவர்களும் இந்த மண் சரிவினால் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
மேலும், மின் பாதிப்பினால ஏ.டி.எம்.கள் பழுதடைந்ததால் பணம் எடுக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
ஏற்காடு மலைப்பாதையில் 14 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கார் கவிழ்ந்து சாலையோர திட்டு இடிந்து விழுந்தது.
இந்த திட்டை நெடுஞ்சாலை துறையினர் கட்டாமல் விட்டு விட்டனர். இந்த இடத்தில் மழை நீர் அதிகளவில் ஓடியதால்தான் மண் அரிப்பு ஏற்பட்டு, மண்சரிவு ஏற்பட காரணமாகியுள்ளது.
– நவீன் குமார்.
