ஏற்காட்டில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 5 பேர் காயம்!

ye2210P1

ye2210P2

ஏற்காட்டில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்காட்டில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியேரிக்காடு கிராமத்தில் இருந்து 23 பயணிகளுடன் TN-38 N-1415 என்ற அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை டிரைவர் மாதேஸ்வரன் ஓட்டி வந்துள்ளார். அந்த பேருந்தை ஆனைக்காடு மற்றும் நல்லூர் பிரிவு ரோட்டில் நல்லூர் கிராமத்திற்கு டிரைவர் வளைக்க முற்படும்போது பிரேக் ஃபெயிலியராகி பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும், பயணிகள் அனைவரும் ஒருவர் மீது ஒருவராக விழுந்து நெரிசலில் சிக்கினர். இதில் பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த குப்பமணிச்சி(வயது65), கரியமலச்சி (வயது35), வெள்ளை(வயது50), கோவிந்தன் (வயது65) ஆகியோரும் டிரைவர் மாதேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.

ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை அதே பகுதியான வெள்ளக்கடையை சேர்ந்தவர் என்பதால்,இது குறித்து தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு சென்று தனது வாகனத்திலேயே காயமடைந்தவர்களை ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்காடு பெரியேரிக்காடு, நல்லூர், ஆணைக்காடு, மோட்டூர், மேலுர் ஆகிய கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த பேருந்தில்தான் தினசரி பள்ளிக்கு செல்வர். நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால், பள்ளி மாணவர்கள் யாரும் பேருந்தில் வரவில்லைஎனவே, பெருமளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்ட்டுள்ளது.

மலைப்பாதையில் செல்வதற்கு தகுதியும், உறுதியும்உடைய பேருந்துகளை ஏற்காட்டிற்கு அரசாங்கம் வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 -நவீன் குமார்.