வேளாண்மை துறையில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்: ஜெயலலிதாவுக்கு இந்தியாடுடே விருது

pr180213eஇந்தியா டுடே குழுமத்தின் சார்பில் ஆண்டு தோறும் தேசிய அளவில் பல துறைகளில் சிறந்த மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்தாண்டுகளில் இந்தியாவில் மிகவும் முன்னேறிய மாநிலம் என்ற வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், வேளாண்மைத் துறையில் பெரிய மாநிலங்களுக்கிடையே தமிழ்நாடு முதல் இடத்தையும் 2012 ஆம் ஆண்டு பெற்று இருக்கிறது.

இரண்டாவது மிகவும் முன்னேறிய மாநிலத்திற்கான விருதினையும், மற்றும் வேளாண்மைத் துறையில் பெரிய மாநிலங்களுக் கிடையேயான சிறந்த மாநிலம் என்ற விருதினையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியர் ராஜிவ் பை வழங்கினார்.

மேலும், இந்தியா டுடே குழுமத்தின் சிறந்த நகரத்திற்கான விருது வழங்கும் விழா 22.2.2013 அன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளதாகவும், கல்வி மற்றும் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த நகரமாக சென்னையும், கல்வி மற்றும் சுற்றுச்சூழலில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக மதுரையும், முதலீட்டை ஈர்ப்பதில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக கோயம்புத்தூரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, இந்தப் பரிசுகளை நேரில் பெற்றுச் செல்ல அமைச்சர் பெருமக்களை அனுப்பி வைக்குமாறு இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டார்.

இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியரின் வேண்டுகோளினை ஏற்று, நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோரை அனுப்பி வைப்பதாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply