சென்னை அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் சுழற்சி முறையில் பொருள் விநியோகம்!

pr110213aசென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், லேக் ஏரியாவில் உள்ள அமுதம் நியாயவிலை அங்காடிகளில் உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் பா.வளர்மதி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்காடிகளின் ஆய்வின்போது குடும்ப அட்டைதாரர்களிடம் அவர்களது குறைகளை அமைச்சர்களும், மாநகராட்சி மேயரும் கேட்டறிந்தபோது அங்கு கூடியிருந்த தாய்மார்களும், மற்றவர்களும் மாதத்தின் முதல் வாரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ஒரே நேரத்தில் அங்காடிக்கு வருவதாலும்,   கூட்டம் அதிகமாக இருப்பதாலும், அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, குடும்ப அட்டைகள் வாரியாக சுழற்சி முறையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் தலத்திலேயே முடிவெடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அமுதம் நியாயவிலை அங்காடிகளிலும் வருகின்ற 1.3.2013 முதல் சுழற்சி முறையில் குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படும் என்றும், தினமும் காலையில் 100 குடும்ப அட்டைகளுக்கும், மதியம் 100 குடும்ப அட்டைகளுக்கும் தவறாது அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதன்படி குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொருள்களை பெற்றுச் செல்ல முடியும். மேலும் அங்காடியில் அனைத்து பொருள்களும் முந்தைய மாதத்தின் கடைசி வாரத்தில் 60 சதவிகிதம் முன்நுகர்வு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலிருந்து அனைத்துப் பொருள்களையும் விநியோகம் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 40 சதவிகித பொருள்களை 5ஆம் தேதிக்குள் நகர்வு செய்து முடித்து சீரான முறையில் விநியோகம் மாத இறுதி வரை நடைபெற வேண்டுமென அங்காடி ஊழியர்களையும், அலுவலர்களையும் உணவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருள்களை அவ்வப்போது வழங்க வேண்டும் என்றும் அனைத்துப் பொருள்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாகத்தான் வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது அங்காடிகளில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பரிசீலனை செய்து  அவசியப்படும் இடங்களில் குடும்ப அட்டைகளை பிரிப்பது சம்பந்தமாக விரைந்து முடிவெடுக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply