ஹோமியோபதி ஆராய்ச்சியில் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் !- குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

ஒடிசாவின் புவனேஸ்வரில் ஹோமியோபதி குறித்த தேசிய அறிவியல் மாநாட்டில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பன்முகத்தன்மையுடைய சுகாதாரச் சூழலில் ஹோமியோபதி முக்கிய பகுதியாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார். பல ஆண்டுகளாக இந்தியாவில் பரவலான நிறுவன கட்டமைப்பை கொண்டுள்ளதுடன், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், பொது சுகாதாரக் கட்டமைப்புகள் மூலம் எளிதில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒன்றாக இது மாறியுள்ளது என்று கூறினார்.

ஹோமியோபதியின் எதிர்கால நம்பகத்தன்மையும், கல்விசார் நிலையும் அதன் ஆராய்ச்சிகளின் முடிவு, அது உருவாக்கக்கூடிய மருத்துவ ஆதாரங்களின் தரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். வலுவான ஆராய்ச்சி கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்முறை அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஹோமியோபதி தொடர்பான அறிவியல் மாநாடு அர்த்தமுடைய கல்விசார் ஈடுபாடு, நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை, எதிர்காலத்திற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றிற்கு சிறந்த தளத்தை அளிப்பதாக கூறினார். அதன் பங்கேற்பாளர்கள், குறிப்பாக இளம் ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிபுணர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

ஹோமியோபதி ஆய்வானது சிறந்த வழிமுறை, முறையாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகள், முறையான ஆவணப்படுத்தல், வெளிப்படையான அறிக்கையிடல் ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆராய்ச்சியின் வரம்புகளை ஒப்புக்கொள்வது, பாதகமான கண்டுபிடிப்புகள் குறித்து புகாரளிப்பது, அறிவியல் சான்று முடிவுகளுக்கு வழிகாட்ட அனுமதிப்பது போன்ற அறிவுசார் நேர்மையும் சம முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

Leave a Reply