மத்திய பாதுகாப்பு அமைச்சகம், மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் இடையே, ராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மையங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார் முன்னிலையில் 2026 நவம்பர் 16-ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மூத்த குடிமக்களின் அனுபவம், பாரம்பரியம், சமூக அக்கறை, அறிவாற்றல் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்வதாக குறிப்பிட்டார். குடும்பம், சமூகம், நாட்டைக் கட்டமைப்பதில், மூத்தக் குடிமக்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறினார். முதியோர்களை பாதுகாப்பது குடும்பத்தினரின் கடமை மட்டுமல்ல; நாம் அனைவரிடன் கடமை என்றும் தெரிவித்தார். முதியோர் நலனை மேம்படுத்த அவர்களுக்கான பராமரிப்பு மையங்கள், இல்லங்கள் அமைக்கப்பட்டு, தரமான சேவைபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
ராணுவ குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களை சிறந்த முறையில் பராமரிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும் என மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார் தெரிவித்தார்.
ராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவுவது, மூத்த குடிமக்கள் பராமரிப்பாளர்களுக்கான பயிற்சி அளிப்பது போன்றவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்களை அதிகரிக்கும் வகையில், அதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தவகையில், தமிழ்நாட்டில் புனித தாமஸ் மலை, கர்நாடகாவில் பெல்காம் உள்ளிட்ட 12 இடங்களில் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் விநியோகம், சுகாதாரமான சூழல் என தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்கள் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திவாஹர்
