கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகள் என எதற்காகவும் பேனர்கள் வைக்கக் கூடாது – மீறினால் ஒழுங்கு நடவடிக்கை; பேனர் வைக்கப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என வைகோ அறிவிப்பு.
சென்னை: சாலை ஓரங்களில் பெரிய அளவிலான பேனர்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் எக்காரணத்தைக் கொண்டும் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சியினர், கலைத்துறையினர், வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர், ஆலய வழிபாட்டினர், பொதுநல அமைப்புகள் மற்றும் திருவிழா, திருமணம், துக்க நிகழ்ச்சிகளை நடத்துவோர் எனப் பல்வேறு தரப்பினரும் சாலையோரங்களில் பெரிய அளவிலான பேனர்களை வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள் எதிர்பாராத விதமாகக் கீழே விழுவதால், அவற்றில் சிக்கி பலர் படுகாயமடைவதுடன், சிலர் உயிரிழக்கும் துயரச் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேனர்கள் வைக்கக் கூடாது என்றும், விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்தால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றங்களும் அரசும் எச்சரித்துள்ளன. இருப்பினும், பேனர் கலாச்சாரம் குறைவதற்குப் பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மைக்காலத்திலும் பேனர்களால் துயரமான சம்பவம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கழகத்தினருக்கு கடும் எச்சரிக்கை
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேனர்கள் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்ததாகவும், இருப்பினும் சிலர் ஆர்வமிகுதியால் அவ்வப்போது பேனர்கள் வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்கூட பேனர்கள் வைக்கப்படுவதைப் பார்ப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இனி கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகள் அல்லது தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பேனர்கள் வைக்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மேலும், இந்த அறிவுறுத்தலை மீறி பேனர்கள் வைக்கப்படும் நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்க மாட்டேன் என்றும், எச்சரிக்கையை மீறி பேனர்கள் வைக்கும் கழகத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பேனர் கலாச்சாரத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற வைகோவின் இந்த அறிவிப்பு, மறுமலர்ச்சி தி.மு.க. தொண்டர்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
