பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக செப்டம்பர் 8-ல் இலங்கைக்குப் பயணம்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2026 செப்டம்பர் 8 முதல் 10 வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். இப்பயணத்தின் போது, பாதுகாப்புத்துறை அமைச்சர், இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகளை நடத்துவதோடு, கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினருடனும் கலந்துரையாடுகிறார். அவருடன், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழுவும் இலங்கைக்குச் செல்கிறது.

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளையும், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பன்முக ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும், 2025-ல் இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயலின் போது மீட்புப் பணிகளில் களமிறங்கிய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதும் இவ்விருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இது, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கை மீதான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா – இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply