இந்திய வனப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு.

இந்திய வனப் பணிப் பயிற்சி அதிகாரிகள் இன்று (ஜூலை 17, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

பயிற்சி அதிகாரிகளிடம் உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்த அதிகாரிகள் காடுகளின் நிர்வாகிகள் மட்டுமல்ல எனவும், இந்தியாவின் இயற்கை பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள் என்றும் கூறினார். இன்று அவர்களின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார். உலகம் பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார். இந்த சவால்களை எதிர்கொள்வதில் காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன எனவும், இதில் வனத்துறை அதிகாரிகளின் பணி, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், நிலையான வளர்ச்சியை நோக்கிய உலகளாவிய முயற்சிகளுக்கும் பங்களிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். வாழ்வின் அடித்தளமாக காடுகள் இருப்பதால், வனப்பரப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு அவர் இளம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

காடுகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுடன் சூழலியல் பாதுகாப்பு இணக்கமாக இருக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். இயற்கையும் சமூகங்களும் இணைந்து செழிக்கக்கூடிய தீர்வுகளை நோக்கிப் பணியாற்றுமாறு அவர் இளம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

காடுகளைப் பாதுகாப்பதில் சமூகங்கள் பங்குதாரர்களாக இருக்கும்போது, பாதுகாப்பு முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதுமே பொதுச் சேவை என்று குடியரசுத்தலைவர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தேசிய இலக்கிற்குச் சூழலியல் பாதுகாப்பு இன்றியமையாததாகும் என அவர் தெரிவித்தார். இந்திய வனப் பணியைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் நாட்டின் முன்னேற்றம் பசுமையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நீடித்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதில் ஒரு உறுதியான பங்கை ஆற்றுவார்கள் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய வனப் பணியில் இரண்டு தொகுதிகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் தற்போது டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் தங்களது தொழில்முறைப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 2024-ம் ஆண்டு தொகுதியில் 111 அதிகாரி பயிற்சியாளர்களும், 2025-ம் ஆண்டு தொகுதியில் 131 அதிகாரி பயிற்சியாளர்களும் உள்ளனர். இதில் ஒவ்வொரு தொகுதியிலும் பூட்டானைச் சேர்ந்த இரண்டு அதிகாரி பயிற்சியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply