சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று (21.06.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் யோகா அமர்வில் பங்கேற்றார். மனிதகுலத்திற்கு ஆரோக்கியம், சமநிலை, மன அமைதிக்கான பாதையை வழங்கிய இந்தியாவின் காலத்தால் அழியாத நாகரிகப் பாரம்பரியத்தை இந்த நாள் கொண்டாடுகிறது என்று அவர் கூறினார். யோகா உடலை மட்டுமல்லாமல், மனதையும் எண்ணங்களையும் சமநிலைப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். யோகா நமக்கு சுயக்கட்டுப்பாட்டின் பாதையைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் முனிவர்களும் அறிஞர்களும் பல நூற்றாண்டுகளாக யோகா பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதை ஒரு வாழ்க்கை முறையாக நிலைநிறுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார். உடல் ஆரோக்கியம், மன அமைதி, மனித உணர்வின் விழிப்புணர்வை மேம்படுத்துவதே அதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். யோகா இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உலகளாவிய மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தற்கால வாழ்வில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய மக்களவைத் தலைவர், மன அமைதி, பொறுமை, உணர்ச்சி சமநிலை, ஒழுக்கமான வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பேணுவதற்கு யோகா ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது என்றார்.
யோகா நாட்டின் மூலைமுடுக்குகளைச் சென்றடைய வேண்டும் என்று மக்களவைத் தலைவர் வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் சமூகத்துடன் தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபட்டு, மக்களை யோகாவை மேற்கொள்ளவும் அதன் சக்தியைப் புரிந்துகொள்ளவும் ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று திரு ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.
திவாஹர்
