மேற்கு ஆசியாவில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் முக்கிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து அவசியமின்றி எரிபொருட்களைச் சேமிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பின்பற்றுமாறும், எல்பிஜி சிலிண்டர்களுக்கு டிஜிட்டல் முறையிலேயே முன்பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலிலும் வீட்டு உபயோக எல்பிஜி, பிஎன்ஜி மற்றும் போக்குவரத்துக்கான சிஎன்ஜி விநியோகம் 100% தடையின்றி வழங்கப்படுகிறது. வணிக ரீதியிலான கேஸ் விநியோகத்தில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புலம் பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி 5 கிலோ எப்.டி.எல் (FTL) சிலிண்டர்களின் விநியோகம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி தேவையைச் சமாளிக்க மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவிக்கிறது. மாநில அரசுகள் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பதுக்கல் மற்றும் கறுப்புச் சந்தை விற்பனையைத் தடுக்கத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. நேற்று மட்டும் நாடு முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட 76 விநியோகஸ்தர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்க 95% விநியோகம் டிஏசி (DAC) எனப்படும் ரகசியக் குறியீடு முறை மூலம் உறுதி செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 97 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், மின்சார அடுப்புகள் மற்றும் பிஎன்ஜி இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் குடிமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
திவாஹர்
