ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்திய பாதுகாப்புப் படைகளின் உறுதிப்பாட்டையும், தெளிவான உயர்வான ராணுவ நெறிமுறைகளையும் பறைசாற்றியது என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ் நாத் சிங் கூறியுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்பூரில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் இன்று (08.05.2026) உரையாற்றிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் குறுகிய காலமே நடத்தப்பட்டதாகவும் ஆனால், அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் எதிரிகளை அது வலுவிழக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, பாதுகாப்பான தகவல் தொடர்பு கட்டமைப்புகள் ஆகியவை அவசியம் என்று அவர் தெரிவித்தார். வருங்கால போர்களில் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு முப்படைகளிலும் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எதிர்கால போர்களில் ஆயுதங்களால் மட்டுமே வெல்ல முடியாது என்றும் தொழில்நுட்பங்களும் மேம்பட்ட ஒருங்கிணைப்பும் தேவை என்றும் அவர் கூறினார். ஆயுதப் படைகளின் திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இதில், முப்படைகளின் தளபதி திரு அனில் சௌகான், கடற்படை தளபதி திரு தினேஷ் திரிபாதி, ராணுவத் தலைமைத் தளபதி திரு உபேந்திர திவிவேதி, விமானப்படைத் தளபதி திரு ஏ பி சிங், பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் செயலாளரும் டிஆர்டிஓ-வின் தலைவருமான டாக்டர் சமீர் காமத் உள்ளிட்டோரும் ராணுவ உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்
