பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து, தாக்குதல் நடத்துவதற்கான நவீன சாதனத்துடன் கூடிய ஏவுகணை சோதனையை, 2026 மே 07 அன்று, ஒடிசா கடற்பகுதியில், வெற்றிகரமாக நடத்தின. ‘தாரா’ எனப்படும் இந்த சாதனம் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கு உதவிடும். இந்த சாதனத்தை வழிகாட்டுதல் அமைப்பு இல்லாத ஏவுகணைகளில் பொருத்துவதன் மூலம், அவற்றை மேம்பட்ட தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளாக மாற்ற முடியும். இது, முதல்முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆயுத அமைப்பு ஆகும்.
தரைவழியாக இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் குறைந்த விலையிலான ஆயுதங்களின் செயல்திறன், துல்லியம், ஆகிய அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில், ஹைதராபாத்தில் உள்ள ‘இமாரத் ஆராய்ச்சி மையம்’ மற்றும் பிற டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகங்கள் இணைந்து ‘தாரா’ என்ற ஆயுத அமைப்பை வடிவமைத்து உருவாக்கியுள்ளன. அதிநவீன, அதே சமயம் குறைந்த விலை தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தும், ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்ட ஏவுகணை அமைப்பு இதுவாகும். இந்தத் தொகுப்பை உருவாக்கும் பணிகள், மேம்பாடு மற்றும் உற்பத்தி கூட்டமைப்பு, பிற இந்தியத் தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து மேற்கொண்டன. இந்நிறுவனங்கள் தற்போது இதன் உற்பத்திப் பணிகளைத் தொடங்கியுள்ளன.
இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததற்காக, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, மேம்பாட்டு & உற்பத்தி கூட்டமைப்பு மற்றும் இதில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதில், இது ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓ அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், இந்த வெற்றிகரமான சோதனையில் ஈடுபட்ட குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
திவாஹர்
