புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐடிஎம்), சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் (SRMIST), ‘மிஷன் மௌசம்’ திட்டத்தின்கீழ், நகர்ப்புற சோதனைத் தளம் மற்றும் தூசுப்படல (ஏரோசல்) கண்காணிப்பு ஆய்வுக்கூடத்தை நிறுவியுள்ளது. இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் இந்த ஆய்வுக்கூடத்தையும் வளிமண்டல அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தையும் (CASRI) இன்று (06 மே 2026) தொடங்கி வைத்தார். மேலும் ஐ.ஐ.டி.எம் மற்றும் எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் செயலாளர் முன்னிலையில் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் பேசிய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம் ரவிச்சந்திரன், இந்த ஆய்வுக்கூடத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 15 கருவிகள் நிறுவப்பட்டுள்ளன என்றார். இந்தக் கருவிகள் மூலம் வளிமண்டலத்திலிருந்து கிட்டத்தட்ட 50 வகையான வானிலை, காற்றின் போக்கு, தூசுப்பாடல துகள்கள், வெப்பநிலை சார்ந்த தரவுகளைப் பெற முடியும். இதன்மூலம் வானிலை சார்ந்த தரவுகள் பெறப்பட்டு மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகளை மக்களுக்கு வழங்கலாம் என்று அவர் கூறினார். சென்னையில் வானிலையை ஆராயும் நிறைய கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தாலும் இந்த வகையிலான ஆய்வுக்கூடம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் நிறுவப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காற்றிலுள்ள துகள்களின் அளவு, வேகம், கடல் காற்று மற்றும் நிலத்தின் காற்று திசை மாறுதல், வெப்பம், கரிம அல்லது கனிம வகையா என்பன உள்ளிட்ட பல காரணிகளை ஆராய்ந்து அவை வானிலையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இந்த தரவுகள் மூலம் மேலும் துல்லியமாக கணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் இப்பகுதியில் புவி வெப்பமயமாதலுக்கான குறித்த குறுகியகால தரவுகளும் கிடைக்கும் இதன்மூலம் நீண்டகால தாக்கங்கள் குறித்தும் ஆராயலாம் என்றும் அவர் மெலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஏ சூர்யசந்திர ராவ், திட்ட இயக்குநர் டாக்டர் தாரா பிரபாகரன், சென்னையிலுள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் ஆர் எஸ் கங்கரா, சென்னையிலுள்ள தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் சிவானந்த தாமோதர் பாய் மற்றும் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவக்குமார் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய அம்சங்கள்:
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.ஐ.டி.எம் புனே, வானிலை, பருவமழை மற்றும் காலநிலை அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்முயற்சியான ‘மிஷன் மௌசம்’ திட்டத்தின் கீழ், நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நகர்ப்புற சோதனைத் தளங்களை ஐ.ஐ.டி.எம் நிறுவி வருகிறது.
அத்தகையதொரு நகர்ப்புற சோதனைத் தளம் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களின் பருவநிலை பாதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும், நகரம் முழுவதும் தூசுப்படலம் (ஏரோசல்), மேகங்கள், மழைப்பொழிவு, வளிமண்டல இயக்கவியல் ஆகிய அம்சங்களை கண்காணிக்க நவீனக் கருவிகளுடன் கூடிய கண்காணிப்பு வசதிகள் இந்த ஆய்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மிஷன் மௌசம் (Mission Mausam): 2024 செப்டம்பர் மாதம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த அறிவியல் முன்முயற்சி, நவீன கண்காணிப்பு உள்கட்டமைப்பு மூலம் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துவதையும், பருவமழை கணிப்பு, கடும் வானிலை குறித்த உடனடி எச்சரிக்கைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயம், நீர் மேலாண்மை, விமானப் போக்குவரத்து, எரிசக்தி போன்ற முக்கியத் துறைகளுக்கு ஆதரவாக காலநிலை சார்ந்த சேவைகளை வலுப்படுத்துவதன் மூலம், இந்தியாவை “வானிலை-தயார்நிலை & காலநிலை-திறன் கொண்ட நாடாக” மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நகர்ப்புற சோதனைத் தளங்கள் மற்றும் மீசோ-நெட்வொர்க்குகள்: இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS), ரேடார்கள், காற்றழுத்தம், வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் கருவிகளைக் கொண்ட விரிவான வானிலை கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படுகின்றன. சென்னையின் நகர்ப்புறங்களில் சுமார் 100 தானியங்கி வானிலை நிலையங்களும், மேகங்கள் & மழை மேகங்களைத் தொடர்ந்து கண்காணிக்க மூன்று கூடுதல் எக்ஸ்-பேண்ட் (X-band) ரேடார்களும் அமைக்கப்பட உள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் புதிய ஆய்வுக்கூடம் இத்துறையில் ஆராய்ச்சி திறன்களை கணிசமாக மேம்படுத்தி, வானிலை மற்றும் காலநிலை சவால்களைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்
